அம்பாந்தோட்டை மட்டுமன்றி ஒவ்வொரு மாவட்டத்துக்கும் வளங்கள் சமமாக பகிரப்பட்ட வேண்டும் : இரா. சாணக்கியன் (Video)
நாட்டில் ஒவ்வொரு மாவட்டங்களுக்குமான வளப்பகிர்வானது சமமாக இருக்க வேண்டும் எனவும் தனியே அம்பாந்தோட்டை மாவட்டத்துக்கு பெருமளவு நிதி ஒதுக்கப்பட்டது தவறானது எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்றையதினம் (29.11.2023) இடம்பெற்ற அமர்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அவர் கூறுகையில்,
“இலங்கை போன்ற ஒரு நாட்டிற்கு அரச, தனியார் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் போன்றவற்றை உள்ளடக்கிய தேசிய போக்குவரத்து கொள்கை ஒன்று மிகவும் அவசியம் ஆகும்.
போக்குவரத்து குளறுபடிகள்
இரண்டு மாதங்களுக்கு முன் வெளியான ஆய்வு அறிக்கையொன்றில் மாவட்ட மட்டத்தில் போக்குவரத்து குளறுபடிகளால் எவ்வளவு நேரம் விரயம் செய்யப்படுகின்றது என குறிப்பிடப்பட்டுள்ளது.
உதாரணமாக நுவரெலியா மாவட்டத்தில் ஒரு இரண்டாம் நிலை பாடசாலையில் கல்வி பயிலும் மாணவன் தனது பாடசாலைக்கு செல்ல அரை மணித்தியாலத்துக்கும் மேற்பட்ட காலத்தை எடுத்துக்கொள்கிறான்.
மேலும் நுவரெலியா, கிளிநொச்சி மற்றும் மொனராகலை போன்ற மாவட்டங்களில் மக்கள் வைத்தியசாலைக்கு செல்ல எடுத்துக்கொள்ளும் நேரம் அதிகமாக காணப்படுகின்றது.
அத்துடன் இந்த மாவட்டங்களில் புகையிரத சேவையிலும் தட்டுப்பாடு நிலவுகின்றது. எனவே இந்த அரசாங்கம் நிலைத்திருப்பின், வரவிருக்கும் ஆண்டிற்கான வரவு செலவுத்திட்டத்திலாவது இந்த பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும்.
அம்பாந்தோட்டை மாவட்டத்திற்கு பெருந்தொகை நிதி
அம்பாந்தோட்டை மாவட்டத்தில் போக்குவரத்து உட்கட்டமைப்புகள் மற்றும் விமான நிலையம் அமைப்பதற்காக பெருந்தொகை பணம் செலவிடப்பட்டுள்ளதுடன் போக்குவரத்தினால் அதிக வருமானத்தை ஈட்டக்கூடிய வவுனியா போன்ற மாவட்டங்களில் முறையான வளப்பகிர்வு இடம்பெறவில்லை.
ராஜபக்சக்களின் குடும்பத்தில் ஒருவரேனும் நாங்கள் அதிவேக வீதிகளை அமைத்தோம் மற்றும் நெடுஞ்சாலைகளை அமைத்தோம் என கூறிக்கொண்டு நீண்டகாலத்துக்கு நாடாளுமன்றத்துக்குள் பிரவேசிக்க எண்ணுகிறார்கள் என நான் நினைக்கிறேன்.
அம்பாந்தோட்டை மாவட்டம் போக்குவரத்து உட்கட்டமைப்பு வசதிகளில் அபிவிருத்தி அடைவது தொடர்பில் எனக்கு எந்தவொரு குற்றச்சாட்டும் இல்லை.
எனினும் மொத்த வரவு செலவுத்திட்டத்தில் பெரும்பகுதி ஒரு மாவட்டத்துக்கு செல்வது மிக தவறானது” என குறிப்பிட்டார்.
விவாதம்
தொடர்ந்து சாணக்கியனின் கருத்துக்கு எதிர்க்கருத்து கூறிய சமல் ராஜபக்ச, அம்பாந்தோட்டை மாவட்டம் விமான நிலையம் அமைப்பதற்கு உகந்த பிரதேசம் என்பதனால் தான் விமான நிலையம் அங்கு அமைக்கப்பட்டது என கூறினார்.
தொடர்ந்து சாணக்கியன் எதிர்க்கருத்து தெரிவிக்கையில்,
“சமல் ராஜபக்சவின் கருத்துடன் விவாதிக்க வேண்டுமென்றால், என்னிடம், அம்பாந்தோட்டை மாவட்டத்தை விட விமான நிலையம் அமைப்பதற்கு உகந்த மாவட்டங்களை ஆதாரத்துடன் எடுத்துரைக்க முடியும்.
அம்பாந்தோட்டை மாவட்டத்தில் அமைக்கப்பட்ட மத்தளை விமான நிலையம் வெற்றிடமான விமான நிலையமாக காணப்படுவதோடு அந்த மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள எண்ணெய் கிணறுகள் உபயோகம் அற்றதாக உள்ளது.
ஒரு நாட்டிற்கு அபிவிருத்தி முக்கியம் என்பதோடு அது மொத்த நாட்டின் பொருளாதாரத்தை பாதிக்காதவாறும் இருக்க வேண்டும்” என கூறினார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





கேரளாவில் நிற்கும் பிரித்தானிய F-35 போர் விமானம்: இந்தியாவிற்கு லட்சங்களில் கிடைக்கும் வருமானம் News Lankasri

ஜுராசிக் வேர்ல்ட் ரீபர்த், சூப்பர்மேன் படங்களின் வசூல் விவரம்.. இதுவரை இத்தனை ஆயிரம் கோடியா Cineulagam
