மன்னார் காற்றாலை திட்டத்தை இடைநிறுத்துவதற்கு தீர்மானம்
மன்னார் காற்றாலை மின்னுற்பத்தித் திட்டம் தொடர்பில் எழுந்துள்ள பிரச்சினைகளுக்கு சகல தரப்பினருடன் கலந்துரையாடி தீர்வு காண்பதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ள நிலையில், அபிவிருத்தித் திட்டப் பணிகளை இடைநிறுத்துவதற்கு மின்சாரத்துறை அமைச்சர் தலைமையில் நடைபெற்ற குழுக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.
காற்றாலை மின்னுற்பத்தித் திட்ட விவகாரம் தொடர்பில் இன்னும் இரண்டு வாரங்களுக்குப் பின்னர் ஜனாதிபதி தலைமையில் விசேட பேச்சில் ஈடுபடுபதற்கும் இந்தக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மன்னார் காற்றாலை மின்னுற்பத்தித் திட்டம் மற்றும் இல்மனைட் கனிய வளம் தொடர்பில் எழுந்துள்ள பிரச்சினை குறித்து நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியில் நேற்று வியாழக்கிழமை விசேட கலந்துரையாடல் மின்சாரத்துறை அமைச்சர் அருண கருணாதிலக தலைமையில் இடம்பெற்றது.
தீர்மானம் எடுக்கப்பட்டது
இந்தக் கலந்துரையாடலில் வன்னி மாவட்ட பிரதிநிதிகள், சிவில் சமூகப் பிரதிநிதிகள் மற்றும் மன்னார் மாவட்ட பிரஜைகள் குழு உட்பட பல்வேறு தரப்பினர்கள் கலந்துகொண்டனர்.
இந்தச் சந்தர்ப்பத்தின் போது மன்னார் காற்றாலை மின்னுற்பத்தித் திட்டத்தால் மன்னார் மாவட்ட மனித மற்றும் இயற்கை வாழிடங்களுக்கு ஏற்படும் பாதிப்பு குறித்து விரிவாக ஆராயப்பட்டது.
திட்டத்தின் ஆரம்பப் பணிகளால் ஏற்பட்டுள்ள பாதிப்புக்களை மன்னார் மாவட்ட சிவில் பிரஜைகள் இதன்போது எடுத்துரைத்தனர். காற்றாலை மின்னுற்பத்தித் திட்டம் குறித்து சகல தரப்பினருடன் கலந்துரையாடி ஒரு தீர்மானத்தை எடுப்பதற்கும், அதுவரையில் இந்தத் திட்டப் பணிகளை இடைநிறுத்துவதற்கும் மின்சாரத்துறை அமைச்சர் தலைமையில் தீர்மானிக்கப்பட்டது.
அத்துடன் இந்த விடயம் குறித்து இரண்டு வாரங்களுக்குப் பின்னர் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுடன் விசேட கலந்துரையாடலில் ஈடுபடுவதற்கும் இதன்போது தீர்மானம் எடுக்கப்பட்டது.
மின்னுற்பத்தித் திட்டப் பணிகளுக்கான பொருத்தல் உபகரணங்களை மன்னார் தீவுக்குள் கொண்டு செல்லாமல் அவற்றைப் பிறிதொரு இடத்தில் பாதுகாப்பாக வைப்பற்குரிய நடவடிக்கைகளை எடுக்குமாறும் அதிகாரிகளுக்கு இதன்போது அறிவுறுத்தல் வழங்கப்பட்டது.
முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள்
இதேவேளை, காற்றாலை அமைத்தல் தொடர்பாக நேற்றைய தினம் வியாழக்கிழமை(7) நாடாளுமன்ற வளாகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடல் குறித்து மக்களுக்கு தெளிவுபடுத்தும் விசேட ஊடக சந்திப்பு இன்று வெள்ளிக்கிழமை(8) பிற்பகல் மன்னாரில் இடம்பெற்றது.
குறித்த ஊடக சந்திப்பில், மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றிய தலைவர் வி.எஸ்.சிவகரன், மனித உரிமைகள் செயற்பாட்டாளர் அருட்தந்தை எஸ்.ஜெயபாலன் குரூஸ் அடிகளார், மன்னார் பிரஜைகள் குழுவின் தலைவர் அருட்தந்தை மார்க்கஸ் அடிகளார், கடற்றொழில் அமைப்பின் பிரதிநிதி என்.எம்.ஆலம் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இதன்போது கருத்து தெரிவித்த சிவகரன்,
“நாடாளுமன்ற வளாகத்தில் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலில் எங்களால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளை சாதகமாக பரிசீலிக்க கூடிய எந்த வாய்ப்பும் அங்கு கிடைக்கவில்லை.
முடிவு எட்டப்படவில்லை
வருகை தந்த அதிகாரிகளும் அமைச்சர்களும் எமது கருத்துக்கு முக்கியத்துவம் வழங்கி செவிமடுக்கவும் இல்லை. ஆரம்பிக்கப்பட்ட திட்டங்கள் தொடர்ந்தும் இடம்பெறும் என்பதையே அவர்கள் தொடர்ந்தும் வலியுறுத்தினார்களே தவிர பாதிப்புக்கள் சம்மந்தமாகவோ அல்லது மக்கள் தொடர்ந்தும் கோரிக்கைகளை முன்வைக்கிறார்கள் என்பதையோ அவர்கள் கண்டுகொள்ளவில்லை.
மின்சார சபையினுடைய நிறைவேற்று அதிகாரிகள் உண்மைக்கு மாறான தகவல்களையும், பொய்யான விடயங்களையும் அக்கூட்டத்தில் முன்வைக்க முயன்றார்கள்.
அதனை நாங்கள் முழுமையாக மறுத்தோம். மன்னார் தீவு பகுதியில் முழுமையாக காற்றாலை அமைப்பதையும், கணிய மண் அகழ்வதையும் நாங்கள் ஒரு போதும் ஏற்றுக் கொள்ள மாட்டோம் என்கின்ற விடயங்களை நாங்கள் வலியுறுத்தினாலும் அவர்கள் அதனை சாதகமாக பரிசீலிப்பதற்கான எந்த முடிவும் எட்டப்படவில்லை.
இரண்டு வாரத்தில் ஜனாதிபதியை சந்தித்து குறித்த விடயத்தை முடிவுறுத்தலாம் என அமைச்சர்கள் கூறியுள்ளனர். தற்காலிகமாக இத்திட்டம் இடை நிறுத்தப்பட்டுள்ளது என ஊடகங்களில் வெளிவந்துள்ள செய்தியை பார்க்கின்ற போது எமக்கு கவலையை ஏற்படுத்துகின்றது.
அவ்விதமான எந்த முடிவும் நேற்றைய(7) கூட்டத்தில் எடுக்கப்படவில்லை. ஆலோசிக்கப்பட்டதே தவிர எவ்வித முடிவுகளும் எடுக்கப்படவில்லை. குறித்த கூட்டம் முடிவின்றி முடிந்து போனது. கலந்துரையாடலில் கலந்து கொண்ட எங்களுக்கு எவ்வித திருப்தியும் இல்லை.
மன்னாரினுடைய உரிமை
அரசாங்கம் தாங்கள் நினைத்தபடி இனப்பிரச்சினை விவகாரத்தை எவ்வாறு கையாள்கின்தோ அவ்வாறு தான் அபிவிருத்தி திட்டங்களையும் கையாள முனைகின்றது. தான்தோன்றித்தனமாக இத்திட்டங்களை தாங்கள் நினைத்த படி செய்து முடிக்கலாம் என யோசிக்கின்றது.
இவ்விடயங்களில் மன்னார் மக்கள் விழித்துக் கொள்ள வேண்டும். நாங்கள் ஒன்று கூடி மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்தி ஜனநாயக ரீதியாக அரசாங்கத்திற்கு பாரிய நெருக்கடியை கொடுக்கும் வகையில் அணி திரளாது விட்டால் இத்திட்டங்களை எங்களினால் இதை நிறுத்த முடியாத ஒரு துர்ப்பாக்கிய நிலை ஏற்படும்.
ஆபத்தான ஒரு நிலையை நோக்கி இத்திட்டங்களின் செயற்பாடுகள் நகர்ந்து கொண்டு செல்கிறது. சில கிராமங்களில் இதை செயற்படுத்துகின்ற நிறுவனங்கள் மக்கள் சிலருக்கும், அமைப்புகளுக்கும் சில சலுகைகளை வழங்கி அவர்களை விலைக்கு வாங்கி தமக்கு சாதகமான நிலைப்பாட்டை ஏற்படுத்தி முயற்சிக்கின்றார்கள்.
எனவே, இதற்கு எதிராக மக்கள் கிளர்ந்து எழுந்து ஜனநாயக ரீதியாக போராடி எங்களுடைய வாழ்வியல் இருப்பு உரிமையையும் வாழ்வாதார இருப்பையும் மன்னாரினுடைய உரிமையையும் பெற்றுக்கொள்வதற்கு முன்வர வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.
மேலதிக தகவல் - ஆசிக்
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



