சுற்றாடலுக்கு பொறுப்பான அரச நிறுவனங்களை மீண்டும் மறுசீரமைக்க தீர்மானம்: சாகல ரத்நாயக்க
சுற்றாடல் தொடர்பில் பொறுப்புகள் ஒப்படைக்கப்பட்டுள்ள அரச நிறுவனங்களை மீண்டும் மறுசீரமைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
துறைமுக நகரின் செயற்கைக் கடற்கரையில் (Beach Plaza) இன்று (16.09.2023) நடைபெற்ற கடற்கரையை சுத்தப்படுத்தும் வேலைத்திட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே இதனைத் தெரிவித்துள்ளார். மேலும் அவர் தெரிவிக்கையில்,
மறுசீரமைப்புப் பணிகளை மேற்கொள்ளவும் மற்றும் சூழலைப் பாதுகாப்பதற்குத் தேவையான சட்டங்களை மேலும் வலுப்படுத்துவதற்கும் குழுவொன்று நியமிக்கப்படும்.
மேலும், சுற்றாடல் மாசடைவதை தடுத்து சுற்றாடலைப் பாதுகாக்கும் நோக்கில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, செயலணியொன்றை நியமிக்கவுள்ளதாகவும், சுற்றாடல் பாதுகாப்பு தொடர்பான வேலைத்திட்டங்களை தயாரித்து அவற்றை நடைமுறைப்படுத்துவது மற்றும் கண்காணிப்பது இந்த செயலணியின் பொறுப்பாகும்.
நீர்வளம் மிகவும் முக்கியமானது
சர்வதேச கடலோர தூய்மை தினம் மற்றும் கடல் வளபாதுகாப்பு வாரத்தை முன்னிட்டு இந்த வேலைத்திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. கரையோரச் சூழல், நீர்த்தேக்கங்கள் மற்றும் கால்வாய்கள், ஆற்றங்கரைச் சூழல் ஆகியவை நமக்கு மிகவும் முக்கியமானவை.
ஒரு புறம், ஒரு தீவு நாடாக, எமக்கு நீர் வளம் மிகவும் முக்கியமானது. மறுபுறம், சுற்றுலாத் துறையில் தங்கியிருக்கும் நாடு என்ற வகையில், சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கத் தேவையான சூழலை நாம் எப்போதும் பாதுகாக்க வேண்டும்.
மக்களிடையே மனப்பாங்கு மாற்றத்தை ஏற்படுத்தவும், விழிப்புணர்வை ஏற்படுத்தவும், குறிப்பாக குழந்தைகளிடையே சுற்றுச்சூழலைப் பாதுகாப்பது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும் இதுபோன்ற திட்டங்கள் மிகவும் முக்கியம்.
நாம் எப்போதும் இவ்விடயங்கள் பற்றி கதைத்துக்கொண்டு மாத்திரமே இருந்தோம். எனவே, இதுபோன்ற திட்டங்களை செயல்படுத்துவது தான் மிகவும் முக்கியம்.
சுற்றுச்சூழலை இழக்க நேரிடும்
இது குறித்து செயற்படுவதற்கு, கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகார சபை, கரையோரப் பாதுகாப்புத் திணைக்களம், உள்ளூராட்சி மன்றங்கள் உள்ளிட்ட பல்வேற நிறுவனங்கள் உள்ளன. இது கடற்படையின் பொறுப்பு அல்ல என்றாலும், அவர்களும் இதற்கு ஒத்துழைப்பு வழங்குகின்றனர்.
இலங்கை சுற்றுலா சபையின் கீழ் வர்த்தமானியில் வெளியிடப்பட்ட சுற்றுலா வலயங்கள் உள்ளன.
மக்களை முறையாகத் தெளிவுபடுத்துவதற்கும், நிலைபேறான திட்டங்களை செயல்படுத்தி சூழல் மாசடைவதைக் குறைப்பதற்கு நாம் இந்தத் திட்டங்களின் மூலம் எதிர்பார்க்கின்றோம். சூழல் நமக்கு மிகவும் முக்கியமானது.
நாம் சூழலை பாதுகாக்காவிட்டால் அடுத்த தலைமுறை இந்த சுற்றுச்சூழலை இழக்க நேரிடும் என தெரிவித்துள்ளார்.
இந்த செயற்பாட்டில் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரால் பிரியந்த பெரேரா, கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் சட்டத்தரணி அசேல பி.றெகவ, பொது முகாமையாளர் ஜகத் குணசேகர, உட்பட பணிப்பாளர் சபை உறுப்பினர்கள் மற்றும் துறைமுக நகர் தனியார் நிறுவனத்தின் சுற்றாடல் ஆலோசகர் டபிள்யூ.ஏ.டி.டி.விஜேசூரிய மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்கள், சமுத்திரப் பல்கலைக்கழகத்தின் மாணவ, மாணவிகள் உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.










