நரேந்திரமோடியை விரைவில் சந்திக்க தீர்மானம்: விக்னேஸ்வரன் தரப்பு தகவல்
இந்திய பிரதமர் நரேந்திரமோடியினை சந்தித்து எமது நிலைகள் குறித்து தெளிவுபடுத்தி தீர்க்கமான முடிவொன்றினை எட்டுவதற்கு தமிழ் தேசிய கட்சிகளை சேர்ந்த ஏழு கட்சிகள் இணைந்து கடிதம் ஒன்றினை அனுப்ப தயாராக உள்ளோம் என நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
அவரது இல்லத்தில் இன்று(11.10.2023) இடம்பெற்ற கட்சி தலைவர்களுக்கு இடையிலான சந்திப்பினை தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறியிருந்தார்.
13 ஆவது திருத்தச்சட்டம்
இது குறித்து மேலும் தெரிவிக்கையில்,
“உடனடியாக கடிதத்தினை அனுப்புவதா இல்லையா என்பது குறித்து எதிர்வரும் வெள்ளிக்கிழமை(13.10.2023) தீர்மானம் எடுக்கவுள்ளோம்.
அத்துடன் இன்று சில கட்சி தலைவர்கள் வருகைதராமையின் காரணமாக இறுதி முடிவு எட்டப்படவில்லை. ஆகவே 13 ஆவது திருத்தச்சட்டத்தை நடைமுறைபடுத்த வேண்டிய தார்மீக பொறுப்பு இந்தியாவிற்கு காணப்படுகின்றது.
இதேவேளை தற்பொழுது நாட்டின் நிலை குறித்தும், தமிழ் மக்களது நிலை குறித்தும் 13 ஆம் திருத்தச்சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டிய அவசியம் குறித்தும் அவருடன் பேச இருக்கின்றோம்.
அத்துடன் தமிழ் மக்கள் கூட்டணி, இலங்கை தமிழரசு கட்சி, ரெலோ, புளொட், ஈ.பி.ஆர்.எல்.எவ், ஜனநாயக போராளிகள் கட்சி,தமிழ் தேசிய கட்சி ஆகிய கட்சிகள் இணைந்து இந்த செயற்பாட்டை முன்னெடுத்துள்ளோம்.
மேலும் கட்சி தலைவர்கள் அனைவரும் இதற்கு சம்மதம் தெரிவிக்கின்ற பொழுதுதான் இது முழுமையான செயல்வடிவம் பெறும்” என தெரிவித்துள்ளார்.