வவுனியாவில் இடமாறிச் சென்ற கிராம நில அதிகாரி: கண்ணீருடன் வழியனுப்பிய மக்கள்
வவுனியா (Vavuniya) - கந்தபுரம் கிராம அலுவலர் பிரிவில் இருந்து இடமாற்றமாகி செல்லும் கிராம நில அதிகாரி ஒருவருக்கு அதிகளவிலான மலர்மாலைகளை சூட்டி கண்ணீருடன் அப்பகுதி மக்கள் வழியனுப்பி வைத்துள்ளனர்.
இந்நிகழ்வானது, இன்று (25.05.2024) இடம்பெற்றுள்ளது.
வவுனியா பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட கந்தபுரம் கிராம அலுவலர் பிரிவில் கடந்த 6 வருடங்களாக லெ.கௌசல்யா என்பவர் கிராம அதிகாரியாக பணியாற்றி வந்துள்ளார்.
பிரியாவிடை நிகழ்வு
கிராம மட்ட அமைப்புக்களுடன் இணைந்து குறித்த அவர் கிராமங்களின் அபிவிருத்திக்காகவும், அம் மக்களுக்கான சேவைகளை இலகுவாக பெற்றுக் கொடுக்கும் வகையிலும் செயற்பட்டிருந்ததாக அப் பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில், அவர், கந்தபுரம் பிரிவிலிருந்து நெளுக்குளம் கிராம அலுவலர் பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ள நிலையில் அவருக்கான பிரியாவிடை நிகழ்வு கிராம மட்ட பொது அமைப்புக்களின் ஏற்பாட்டில் கந்தபுரம் பொதுநோக்கு மண்டபத்தில் இடம்பெற்றுள்ளது.
இதன்போது, அக் கிராம மட்ட பொது அமைப்புக்கள், கிராம மக்கள் என பலரும் மலர்மாலை அணிவித்து கிராம நில அதிகாரியை மகிழ்வித்ததுடன், அவரை கண்ணீர் மல்க வழியனுப்பி வைத்துள்ளனர்.
இதன்போது, குறித்த நிகழ்வின் நினைவாக பயன் தரு மரநடுகையும் இடம்பெற்றுள்ளது.
மேலும், இந்நிகழ்வில் வவுனியா பிரதேச செயலக நிர்வாக உத்தியோகத்தர், அயல் கிராம கிராமஅலுவலர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |