நங்கூரம் இடும் துறை ஒன்றை அமைத்துதரக் கோரும் பருத்தித்துறை முனை கடற்றொழிலாளர்கள் (Video)
யாழ். பருத்தித்துறை முனை கடற்றொழிலாளர்கள் தமக்கு தமது படகுகளை நிறுத்தி கடற்றொழிலில் ஈடுபட தமக்கு ஒரு நங்கூரம் இடும் துறை ஒன்றினை அமைத்துத் தருமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.
இக் கோரிக்கையை தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கத்தினரிடம் நேற்று (07.11.2022) கோரிக்கையொன்றை முன்வைத்துள்ளனர்.
அரசியல்வாதிகள் தேர்தல் காலங்களில் பல தடவைகள் தமக்கு வாக்குறுதி தந்தும் இதுவரை குறித்த நங்கூரமிடும் துறை அமைத்து தரவில்லை என்றும் அதேவேளை பருத்தித்துறையில் துறைமுகம் விஸ்தரிக்கப்பட்டால் தாம் தமது சிறு தொழிலில் ஈடுபட முடியாத நிலை ஒன்று ஏற்படும்.
துறைமுகம் அமைந்தால் அது பலநாட்களில் பயன்படும் என்றும், மயிலிட்டி துறைமுகம் அமைக்கப்பட்டதால் மயிலிட்டி சிறு மீனவர்கள் தொழிலில் ஈடுபட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது என்றும் அது தமக்கு நல்ல அனுபவம் என்றும் முனை கடற்றொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கத்தின் தேசிய அமைப்பாளர் கேமன் குமார,
தேசிய பெளதீக வள அபிவிருத்தி திட்டத்திலான அபிவிருத்தி மக்களுக்கு பாதிக்காத வகையில் முன்னெடுக்கப்பட வேண்டும். அந்த வகையில் வடக்கில் முன்னெடுக்கப்படவுள்ள தேசிய பெளதீக வள அபிவிருத்தி திட்டத்திலான பருத்தித்துறை துறைமுகம் அமைப்பது தொடர்பில் பருத்தித்துறை கடற்றொழிலாளர்களின் நிலைப்பாடு தொடர்பில் கள ஆய்வு தே.மீ.ஒ. இயக்கத்தினரால் முன்னெடுக்கப்பட்டது.
வடமராட்சி வடக்கு சுப்பர்மடம், சக்கோட்டை, பருத்தித்துறை, கொட்டடி, முனை கடற்றொழிலாளர்களின் கிராமங்களில் சென்று மக்களுடன் கலந்துரையாடி, மக்களின் கருத்துக்களை கேட்டறிந்து கொண்டார்.
மூன்று நாட்களாக நடாத்திய கள ஆய்வின் நிறைவில் இன்று ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்தனர்.
கடலட்டை பண்ணை விடயம் தொடர்பில் பேச்சுவார்த்தை
யாழ் மாவட்ட கடற்றொழிலாளர் சங்க பிரதிநிதிகள் ஆரியகுளம் நாகவிகாரை விகாராதிபதி மீகஹஜந்துர சிறிவிமல தேரரை கடலட்டை பண்ணை விடயம் தொடர்பாக சந்தித்து கலந்துரையாடினர்.
யாழ் மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவுச்சங்க சமாசங்களின் சம்மேளனத்தின் ஏற்பாட்டில் குறித்த சந்திப்பு இடம்பெற்றது. குறித்த சந்திப்பில் சம்மேளனத்தின் தலைவர் அ.அன்னராசா, உப தலைவர் நா.வர்ணகுலசிங்கம் உள்ளிட்ட பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர்.
கடலட்டை பண்ணைகளை அமைக்கும் போது அதனை ஆய்வுக்குட்படுத்தி மேற்கொள்ளல், ஜனாதிபதி மற்றும் பிரதமரிடம் கடலட்டை பண்ணை தொடர்பாக பேசுவதற்கான சந்தர்ப்பத்தை ஏற்படுத்துதல் போன்ற விடயங்கள் இதன்போது கலந்துரையாடப்பட்டது.
அரசியல் தலைவர்கள் உட்பட அரசாங்க அதிகாரிகள் கடலட்டை பண்ணை தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்காத நிலையில் மதத்தலைவர்களை சந்தித்து அவர்கள் மூலம் அரசியல் தலைவர்களை அணுகுவதற்காக இந்த நடவடிக்கையை தாங்கள் மேற்கொள்வதாக கடற்றொழிளர் சங்க பிரதிநிதிகள் தெரிவித்ததுடன் சகல மதத் தலைவர்களையும் சந்தித்து கலந்துரையாடவும் தீர்மானித்துள்ளதாக தெரிவித்தனர்.
மீனவர்களையும் படகையும் விடுவிக்க வலியுறுத்தி மத்திய மாநில அரசுகளுக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம்
அத்துமீறி இலங்கை கடற்பரப்பிற்குள் நுழைந்து மீன்பிடியில் ஈடுபடும் இந்திய களை இலங்கை கடற்படையினர் தொடர்ச்சியாக கைது செய்து வருகின்றனர்.
இந்நிலையில், கடந்த மாதம் 27 மற்றும் இந்த மாதம் 5ம் திகதி மீன்பிடிக்க சென்ற கடற்றொழிலாளர்களையும் படகையும் இலங்கை கடற்படை கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்திய பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களுக்காக இன்று (08.11.2022) தங்கச்சிமடம் வலசை தெருவில் 200க்கும் மேற்பட்ட கடற்றொழிலாளர்கள் மற்றும் மீனவ பெண்கள் ஒன்று சேர்ந்து மத்திய மாநில அரசுகளுக்கு தங்களது கோரிக்கையை வலியுறுத்தி கண்டன முழக்கங்கள் எழுப்பி தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர்.
இதனைக் கண்டித்து ராமேஸ்வரம் கடற்றொழிலாளர்கள் ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தமும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட மீனவர்கள் கூட்டத்தில் முடிவு செய்தனர்.
இந்த நிலையில் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு இலங்கை வசம் இருக்கும் 22 மீனவர்களையும் விடுவிக்க வேண்டும். அதே போல 2017ம் ஆண்டு முதல் தற்போது வரை இலங்கை வசம் உள்ள படகுகளை விடுவிக்க வேண்டும்.
பாரம்பரிய இடத்தில் கடற்றொழிலாளர்கள் மீன் பிடிக்க வழிவகை செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும், தங்களது கோரிக்கைகளை மத்திய மாநில அரசுகளுக்கு தெரிவிக்கும் விதமாகவும் ஒரு நாள் அடையாள வேலை நிறுத்த போராட்டமும் , கண்டன ஆர்ப்பாட்டத்திலும் மீனவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த மீனவர்களின் வேலை நிறுத்தம் காரணமாக 800க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டுள்ளது. இந்த வேலை நிறுத்த போராட்டம் காரணமாக சுமார் 15,000 மேற்பட்ட மீனவர்கள் வேலை இழக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.




