சாரதிகளை சீர்படுத்த முன் நவீனமயமாக்கப்பட்ட வீதிகளை அமையுங்கள்: அரசாங்கத்திற்கு விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை
சாரதிகளை சீர்படுத்த முன் நவீனமயமாக்கப்பட்ட வீதிகளை உருவாக்குமாறு அரசாங்கத்திடம் மாகாணங்களுக்கு இடையிலான தனியார் பேருந்து சங்கத்தின் செயலாளர் அஞ்சன பிரியஞ்சித் கோரிக்கை விடுத்துள்ளார்.
ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றில் நேற்று(22.01.2024) கலந்துக்கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இந்த வேண்டுகோளை முன்வைத்துள்ளார்.
இது தொடர்பாக தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,
”அரசாங்கமும் பொலிஸாரும் நவீனமயமாக்கப்படவுள்ள வீதிகளை அமைக்காமல் புத்திசாலித்தனமான சாரதிகளை உருவாக்க முடியாது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
விபத்துகளுக்கான காரணம்
கொழும்பில் அதிக எண்ணிக்கையிலான விபத்துக்கள் கொழும்பு நகரத்திலா அல்லது கொழும்பிற்கு வெளியே நடக்கின்றனவா என்பதைக் கண்டறிந்து கூறுமாறு நாங்கள் பொலிஸ் திணைக்களத்திடம் கேள்வி எழுப்பினோம்.
அதேவேளை, கொழும்பு நகரில் ஏற்படும் மரண விபத்துகளுக்கான காரணம் எங்களுக்குத் தெரியும். விஐபி அதிகாரிகள், பொலிஸ் அதிகாரிகளின் புதல்வர்கள் கடந்த காலங்களில் நடந்து கொண்ட விதம் குறித்து நாம் அனைவரும் அறிவோம்.
அவர்கள் மீது முறையான சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டதா என்பது எங்களுக்குத் தெரியவில்லை.
இந்த அரசு, வரி அபராதத்தில் இயங்குகிறது என்று தெளிவாகச் சொல்லலாம். பஸ் முன்னுரிமைப் பாதை இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு செயல்படுத்தப்பட்டது. அது மிகக் குறுகிய காலத்தில் நிறுத்தப்பட்டது.
விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
எனவே, நவீனமயப்படுத்தப்பட்ட சாரதிகளை உருவாக்கும் முன், பேருந்து முன்னுரிமை பாதையை மீண்டும் கொண்டு வருவது நல்லது. மீண்டும் அது நடைமுறைக்கு வந்தால் அதனைக் கடைப்பிடிக்க நாங்கள் தயாராக இருக்கிறோம்.
மேலும், கொழும்பில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில், பிரதான வீதிகளின் இருபுறமும் உள்ள வாகன தரிப்பிடங்களை அகற்றுவதற்கு பொலிஸார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
போக்குவரத்து விதிகளை மீறும் பேருந்து உரிமையாளர்களுக்கு அபராதத் தாள்களை அனுப்பும் சிறப்புத் திட்டத்தை பொலிஸார் தொடங்கினால், நாளை காலை முதல் மக்கள் தங்கள் கடமைகளுக்கு சரியான நேரத்தில் வருவதற்கு பேருந்துகள் இருக்காது” என கூறியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |