பாடசாலைகளின் அபிவிருத்தி திட்டங்களுக்கு உலக வங்கியிடம் முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கை
பாடசாலைகளில் பௌதீக வளங்களை கொள்வனவு செய்வதற்கு செலவிடப்படும் தொகையை அதிகரிப்பதற்கான யோசனைகள் ஆசிய அபிவிருத்தி வங்கி மற்றும் உலக வங்கியிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
அதற்கான மதிப்பீடுகள் தயாரிக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.
பாடசாலைகளின் பௌதீக வளங்களை மேம்படுத்துவதற்கு பயன்படுத்தப்படும் உள்ளீடுகளின் தரத்தை அதிகரிப்பதற்கு எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் புத்திக பத்திரன நாடாளுமன்றத்தில் எழுப்பிய வாய்மூல கேள்விக்கு பதிலளிக்கும் போதே கல்வி அமைச்சர் மேற்கண்டவாறு விளக்கமளித்துள்ளார்.
உலக வங்கியின் நிதி
தேசிய பாடசாலைகளுக்கு கல்வி அமைச்சினாலும் மாகாண பாடசாலைகளுக்கு மாகாண கல்வி அமைச்சினாலும் பாடசாலைகளில் தரமான உள்ளீடுகளுக்கு பணம் ஒதுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இதற்கு மேலதிகமாக உலக வங்கியின் நிதியுதவியின் கீழ் குறிப்பிட்ட தொகை வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்த கல்வி அமைச்சர் ஆசிய அபிவிருத்தி வங்கியின் கீழ் வழங்கப்படும் உதவிகள் ஆசிரியர் பயிற்சி மற்றும் தரமான உள்ளீடுகளுக்கு செலவிடப்படும் எனவும் கூறியுள்ளார்.
2025 ஆம் ஆண்டிற்கான தேவையான மதிப்பீடுகள் தயாரிக்கப்பட்டு வருவதாகவும், அடுத்த வருடம் நிறுவனங்களுக்கு முன்மொழிவு சமர்ப்பிக்கப்படும் என்றும் அமைச்சர் மேலும் கூறியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |