கிழக்கில் அபரிக்கப்பட்ட காணிகளை மீள விடுவிக்குமாறு கோரிக்கை
கிழக்கு மாகாணத்தில் அபகரிக்கப்பட்டுள்ள குடியிருப்பு, வாழ்வாதாரம் மற்றும் கலாச்சார அடையாளங்களுக்குரிய காணிகளை பறிக்கப்பட்டமை அடிப்படை உரிமை மீறல் என வலியுறுத்தி அவற்றினை மீள மக்களிடம் ஒப்படைக்குமாறும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இது தொடர்பிலான காணி வார செயற்பாடுகள் கடந்த ஒரு மாதகாலமாக நடைபெற்று வந்த நிலையில் இந்த செயற்பாட்டின் இறுதி நாள் செயற்பாட்டு நிகழ்வு நேற்று(24.04.2026) வரை நடைபெற்றுள்ளது.
இந்நிகழ்வு, இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் காணியை இழந்தவர்களின் கருத்துக்களை மற்றும் ஆலோசனைகளை முன்வைக்கும் வகையில் இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காணிகளை மீள பெறும் நடவடிக்கை
கிழக்கு மாகாணதில் தங்களது குடியிருப்பு, ஜீவனோபாய மற்றும் மத வழிபாட்டு இடங்கள் என இலங்கை அரசின் 7 வகையான பொறி முறைகள் ஊடாக கையகப்படுத்தப்பட்டுள்ளன.
இந்த காணிகளை மீளவும் பெற்றுக்கொள்வதற்கு காணியை இழந்த மக்கள் பல ஆண்டு காலமாக முயற்சித்து வருகின்றனர். அவர்களின் அடிப்படை உரிமையினை வலியுறுத்தும் வகையில் இந்த வாரம் தொடர்ச்சியாக கிழக்கு மாகாணத்தில் கடந்த மார்ச் 23ஆம் திகதி தொடக்கம் நடைபெற்று வந்தது.

இறுதி நாள் நிகழ்வு நேற்றைய தினம்(23) மட்டக்களப்பு சர்வோதயம் மண்டபத்தில் அகம் மனிதவள நிலையம் மற்றும் சூழலியல் நீதிக்கான மக்கள்கூடல் ஆகிய அமைப்புகள் இணைந்து கிழக்கு மாகாண காணி வலையமைப்பு நடத்தி வைத்துள்ளது.
அகம் மனித வள நிலையத்தின் பணிப்பாளர் கண்டுமணி லவகுகராசா, சூழலியல் நீதிக்கான மக்கள் கூடல் அமைப்பின் இணைப்பாளர் த.கிருஸாந்த் ஆகியோரின் கூட்டுத்தலைமையில் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், மட்டக்களப்பு மாவட்ட மனித உரிமைகள் ஆணைக்குழுவின் இணைப்பாளர் ஏ.எல்.இஸ்ஸடீன், முன்னாள் கிழக்கு காணி ஆணையாளரும் காணி விசேட மத்தியத்தர்கள் சபை தவிசாளருமான கே.குருநாதன் ஆகியோர் சிறப்பு வளவாளர்களாக கலந்துகொண்டனர்.
அத்துடன், கிழக்கு மாகாணத்தின் திருகோணமலை, மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களில் காணிகளை இழந்த மக்கள், காணி வலையமைப்பின் உறுப்பினர்கள், சிவில் சமூக செயற்பாட்டாளர்கள், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் என பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது காணிகளை இழந்துள்ள மக்கள் எதிர்கொண்ட பிரச்சினைகள், சவால்கள் குறித்து கலந்துரையாடப்பட்டதுடன் தமது காணிகளை மீளப்பெற்றுக்கொள்வதற்கு சட்டரீதியாக முன்னெடுக்கவேண்டிய செயற்பாடுகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.
காணிகளை இழந்த மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கு இதன்போது அனுப்புவதற்கான மனு ஒன்று மட்டக்களப்பு மாவட்ட மனித உரிமைகள் ஆணைக்குழுவின் இணைப்பாளர் ஏ.எல்.இஸ்ஸடீனிடம் வழங்கி வைக்கப்பட்டது.
கையளிக்கப்பட்ட மனு
அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, இலங்கையின் கிழக்கு மாகாணமான திருகோணமலை, மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களில் குடியிருப்பு, வாழ்வாதாரம் மற்றும் கலாச்சார அடையாளங்களுக்குரிய நிலங்களை இழந்த நாங்கள், எமது அடிப்படை உரிமைகளை மீளப் பெற்றுக்கொள்ளும் நோக்கில் இந்த மரியாதையுடனான வேண்டுகோளை தங்களுக்கு சமர்ப்பிக்கின்றோம்.
2026 மார்ச் 23ஆம் திகதி திருகோணமலையில் “காணி வாரம்” எனும் மக்கள் விழிப்புணர்வு செயற்றிட்டத்தைத் தொடங்கிய நாங்கள், ஒரு வார காலம் முழுவதும் கிழக்கு மாகாணம் முழுவதும் விழிப்புணர்வு நடவடிக்கைகள் மற்றும் உரிமை கோரல் பிரச்சாரங்களை முன்னெடுத்தோம்.

இச்செயற்பாடுகளின் நிறைவாக, 23.04.2026 அன்று மட்டக்களப்பில் அமைந்துள்ள சர்வோதயா ஒன்று கூடல் மண்டபத்தில் காணி உரிமையாளர்கள், பாதிக்கப்பட்ட மக்கள், சிவில் அமைப்புகள், பெண்கள் வலையமைப்புகள் மற்றும் காணி மீட்பிற்கான பிராந்திய வலையமைப்புகள் ஒன்றுகூடி, இந்த கூட்டு வேண்டுகோளை தங்களுக்கு அனுப்புகின்றோம்.
இலங்கையில் ஆயுத மோதல்கள் முடிவுற்ற பின்னரும், பெருமளவு மக்கள் தங்களது சொந்த நிலங்களுக்கான சட்டபூர்வ ஆவணங்களைப் பெற முடியாமல் இன்னும் சிக்கலில் உள்ளனர். மேலும், அரசின் பல்வேறு நிர்வாக நடவடிக்கைகள், தனிநபர் மற்றும் நிறுவன தலையீடுகள் ஆகியவற்றின் மூலம் குடியிருப்பு, வாழ்வாதாரம் மற்றும் மத கலாச்சார இடங்கள் சட்டரீதியாகவும் சட்டமுறையற்றும் அபகரிக்கப்பட்டுள்ளன என்பதும் கவலையளிக்கிறது.
குறிப்பாக, கீழ்க்காணும் வகைகளின் கீழ் நிலங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன என்பதை நாம் பதிவு செய்கிறோம், தொல்லியல் பகுதிகள், பாதுகாப்பு வலயங்கள், வனவளப் பகுதிகள், பூஜா நிலங்கள், வனவிலங்கு பாதுகாப்புப் பகுதிகள், அபிவிருத்தித் திட்டங்கள், சுற்றுலா பிரதேசங்கள்.
இந்த நடவடிக்கைகள் பல சந்தர்ப்பங்களில் மக்கள் இடம்பெயர்வு, வறுமை, வாழ்வாதார இழப்பு மற்றும் சமூக அடையாள சிதைவு போன்ற கடுமையான விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது. எமது நிலங்களை மீளப் பெறுவதற்காக நாங்கள் பல்வேறு ஜனநாயக மற்றும் சட்டரீதியான முயற்சிகளை மேற்கொண்டுள்ளோம். அதில், அரச அதிகாரிகளுடன் கலந்துரையாடல்கள், அரசியல் பிரதிநிதிகளுடன் சந்திப்புகள், அமைதியான போராட்டங்கள், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தகவல் கோரல்கள், மற்றும் சர்வதேச சமூகத்துடன் தொடர்புகள் ஆகியவை அடங்கும். இருப்பினும், இதுவரை நிலையான மற்றும் முழுமையான தீர்வு எமக்கு கிடைக்கவில்லை.
யுத்தத்தால் இழந்த காணிகளை வழங்க கோரிக்கை
மேன்மை தாங்கிய ஜனாதிபதி அவர்களே, இலங்கை அரசின் தலைவராகிய தாங்கள், யுத்தத்தால் பாதிக்கப்பட்டு காணிகளை இழந்த மக்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு தீர்வு காணும் பொறுப்பை வகிக்கின்றீர்கள் என நாங்கள் நம்புகின்றோம்.

எனவே, எங்களது பணிவான வேண்டுகோள்கள் வருமாறு,
காணி இழந்த மக்களின் நிலங்களை அடையாளம் கண்டு விரைவான மீளளிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளுதல், இதுவரை ஆவணங்கள் இன்றி பல ஆண்டுகளாக குடியிருக்கும் காணிகளுக்கு சட்டபூர்வ ஆவணங்களை விரைவாக வழங்குவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளல், அபகரிக்கப்பட்ட காணிகள் தொடர்பான சுயாதீன விசாரணைகளை மேற்கொண்டு மக்களின் காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுத்தல், காணி இழந்துள்ள மக்களின் வாழ்வாதார மீட்பு மற்றும் மறுவாழ்வு திட்டங்களை நடைமுறைப்படுத்துதல், மத மற்றும் கலாச்சார உரிமைகள் பாதுகாக்கப்படுவதை உறுதி செய்தல், நாங்கள் எங்களது சொந்த நிலங்களில் கண்ணியத்துடன், பாதுகாப்புடன் மற்றும் எங்களது அடையாளங்களுடன் வாழ விரும்புகிறோம்.
எமது வேண்டுகோளை கருணையுடன் பரிசீலித்து, நீதியும் சமத்துவமும் நிலைநிறுத்தும் வகையில் தகுந்த நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு தங்களை பணிவுடன் கேட்டுக்கொள்கிறோம் என குறிப்பிடப்பட்டுள்ளது.
காந்திமதியை வீட்டைவிட்டு வெளியே போகச்சொன்ன கதிர், ஷாக்கான குடும்பம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் புரொமோ Cineulagam
விஜய் டிவியில் ஹிட் சீரியலில் என்ட்ரி கொடுத்துள்ள பாண்டியன் ஸ்டோர்ஸ் புகழ் சுஜிதா... எந்த தொடர் தெரியுமா? Cineulagam