சீதாவக்கை பிரதேச சபையை கூட்டுமாறு எழுத்து மூல கோரிக்கை
கடந்த மூன்று மாதங்களாக கூட்டப்படாமல் இருக்கும் சீதாவத்தை பிரதேச சபையை உடனடியாக கூட்ட நடவடிக்கை எடுக்குமாறு அதன் பெரும்பான்மை உறுப்பினர்கள் எழுத்துமூல கோரிக்கை விடுத்துள்ளனர்.
கடந்த மே மாதம் நடைபெற்ற உள்ளுராட்சி மன்றத் தேர்தல்களின் போது சீதாவக்கை பிரதேச சபையில் எந்தவொரு கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை.
அதனையடுத்து கடந்த ஜுன் மாதம்17ம் திகதி சீதாவக்கை பிரதேச சபையின் தவிசாளர் மற்றும் உபதவிசாளரைத் தெரிவு செய்வதற்கான கூட்டம் நடைபெற்றது.
ஆனாலும் அன்றைய தினம் சபைக்குத் தெரிவு செய்யப்பட்டவர்களில் போதிய உறுப்பினர்கள் சமூகமளிக்காமை காரணமாக கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது.

மீண்டும் கூட்டப்பட்ட பிரதேச சபை
இரண்டாம் தடவையாக கடந்த ஜுலை மாதம் 15ம் திகதி சீதாவக்கை பிரதேச சபை மீண்டும் கூட்டப்பட்டபோது தவிசாளர் மற்றும் உபதவிசாளரைத் தெரிவு செய்வதற்காக மேற்கொள்ளப்பட்ட வழிமுறை தொடர்பில் ஏற்பட்ட அமளி காரணமாக சபை மீண்டும் ஒத்திவைக்கப்பட்டது.
அதன் பின்னர் இன்றுவரை சபையைக் கூட்டுவதற்கான எந்தவொரு நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை.
அதன் காரணமாக தங்களுக்கு வாக்களித்த மக்களின் உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக சபையின் பெரும்பான்மை உறுப்பினர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
சபையை உடனடியாக கூட்ட நடவடிக்கை
ஆளுங்கட்சியான தேசிய மக்கள் சக்தியினால் சீதாவக்கை பிரதேச சபையைக் கைப்பற்ற முடியாமல் போனதன் காரணமாகவே சபையைக் கூட்டுவதில் அரசாங்கம் அசிரத்தை காட்டுவதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
எனவே சீதாவக்கை பிரதேச சபையை உடனடியாகக் கூட்ட நடவடிக்கை மேற்கொள்ளுமாறு மேல் மாகாண உள்ளுராட்சி ஆணையாளர், ஆளுனர் மற்றும் உள்ளுராட்சி, மாகாண சபைகள் அமைச்சிடம் சபையின் பெரும்பான்மையான உறுப்பினர்கள் எழுத்துமூல கோரிக்கை விடுத்துள்ளனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |