அரசாங்க உத்தியோகத்தர்களின் இடமாற்றம் தொடர்பில் முன்வைக்கப்பட்ட கோரிக்கை
60 வயதை பூர்த்தி செய்த அரசாங்க உத்தியோகத்தர்களை வருடாந்த இட மாற்றத்துக்கு உட்படுத்துவது ஏற்புடையது அல்ல என்று அகில இலங்கை அரசாங்க பொது ஊழியர் சங்கம் சுட்டிகாட்டியுள்ளது.
இந்த விடயத்தை கிழக்கு மாகாண ஆளுனர் மற்றும் பிரதம செயலாளர் ஆகியோருக்கு அகில இலங்கை அரசாங்க பொது ஊழியர் சங்கத்தின் தலைவர் எஸ்.லோகநாதன் கடிதம் மூலம் தெரிவித்துள்ளார்.
சுற்றறிக்கை தகவல்
இந்த கடிதத்தில்,"அரசாங்க உத்தியோகத்தர்களின் கட்டாய ஓய்வுக்கான வயது எல்லை கடந்த ஜனவரி முதலாம் திகதி முதல் 65 ஆக நீடிக்கப்பட்டு உள்ளது. இது தொடர்பாக அரசாங்க நிர்வாக சுற்றறிக்கையும் வெளியிடப்பட்டு அலுவலகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது.
முன்வைக்கப்பட்ட கோரிக்கை
இதன்படி 60 வயதை பூர்த்தி செய்த அலுவலர்களை இட மாற்றம் செய்யலாம் என்று சுற்றறிக்கையில் கூறப்பட்டு இல்லை. மேலும் தற்போது மிக இக்கட்டான காலம். வாழ்க்கை செலவுகளை சமாளிக்க முடியாமல் உள்ளது. போக்குவரத்து செலவுகளையும் சமாளிக்க முடியாமல் உள்ளது.
வயது காரணமாக
நோயாளிகளாகவும் அலுவலர்கள் உள்ளனர். இவர்கள் சுறுசுறுப்பாகவும் வினை
திறனுடனும் கடமையாற்றியவர்கள். இவர்களை இடம் மாற்ற செய்ய தீர்மானிப்பது
இவர்களின் மனங்களையும் பாதிப்படைய செய்யும்"என குறிப்பிடப்பட்டுள்ளது.