வட மாகாண சுகாதாரத் துறை தொடர்பில் சுகாதார அமைச்சரிடம் விடுக்கப்பட்ட கோரிக்கை
வடக்கு மாகாண சுகாதார துறையில் காணப்படும் ஆளணிப் பற்றாக்குறைக்கான தீர்வுகளை வழங்குமாறு சுகாதார அமைச்சரிடம் ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.
சுகாதாரத்துறை தொடர்பான விசேட கலந்துரையாடல் சுகாதார அமைச்சர் வைத்தியர் ரமேஷ் பத்திரன தலைமையில் நேற்று (17.07.2024) நடைபெற்ற போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
சிறந்த சேவைகள்
மேலும் குறிப்பிடுகையில், “ சுகாதார மற்றும் கல்வித் துறைகளே நாட்டில் மிகவும் சிக்கல் வாய்ந்தவைகளாக காணப்படுகின்றன.
இந்த இரண்டு துறைகளிலும் பணிபுரிபவர்கள் மிகவும் அர்ப்பணிப்புடன் சேவையாற்றுகின்றனர்.
எனினும் மாகாணத்தை பொறுத்தவரையில் எங்களுக்கு பல சவால்கள் காணப்படுகின்றன. வளப்பற்றாக்குறை காணப்படுவதுடன், எங்கள் மீதான குற்றச்சாட்டுக்களும் காணப்படுகின்றன.
சுகாதார துறையில் பல விடயங்களை மேம்படுத்த வேண்டிய தேவைக் காணப்படுகின்றது.
நோய் தடுப்புக்களை மேற்கொள்வதுடன் நோயாளர்களின் உரிமைகளை பாதுகாக்குமாறே எனது அதிகாரிகளுக்கு நான் கூறி வருகின்றேன். வரையறுக்கப்பட்ட வளங்களை பயன்படுத்தி சிறந்த சேவைகள் முன்னெடுக்கப்படுகின்றன.
அதிகபட்ச முயற்சி
மாகாண சுகாதார துறையை மேம்படுத்துவது தொடர்பில் எனது அதிகாரிகளுடன் தொடர்ந்து கலந்துரையாடி வருகின்றேன்.
அத்துடன் ஜனாதிபதியால் நான்கு வைத்தியசாலைகளில் திறந்து வைக்கப்பட்ட விசேட பிரிவுகளிலும் வளங்களை பகிர்ந்து பயன்படுத்துவது தொடர்பில் ஆராயப்படுகிறது.
முல்லைத்தீவு மற்றும் மன்னார் மாவட்டங்களில் காணப்படும் வைத்தியசாலைகளின் குறைப்பாடுகள் தொடர்பில் அறிந்துள்ளோம்.
குறித்த வைத்தியசாலைகள் தொடர்பான முன்மொழிவுகள் தயார் செய்யப்பட்டு இந்திய உயர்ஸ்தானிகராலயத்திற்கு சமர்பிக்கப்பட்டுள்ளன.
மக்களை பாதுகாப்பதற்கான அதிகபட்ச முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
இந்நிலையில் மாகாண சுகாதார துறையில் காணப்படும் ஆளணிப் பற்றாக்குறைக்கு தீர்வுகளை வழங்குமாறு அமைச்சரிடம் கோரிக்கை முன்வைத்தேன். இந்த விடயம் தொடர்பில் விரைவில் தீர்வுகளை பெற்றுத்தருவதாக அமைச்சர் உறுதியளித்துள்ளார்” எனவும் ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |