முஸ்லிம்களுக்கு எதிரான சில வார்த்தைகளை நீக்க வேண்டும் : முஷாரப் எம்.பி கோரிக்கை
மதத்தின் பெயரிலான பயங்கரவாதம் பற்றி பேசும் போது, நாடாளுமன்றத்தில் முஸ்லிம், இஸ்லாமிய பயங்கரவாதம் என்ற வார்த்தைகளை பயன்படுத்துவதை முதலில் நீக்க வேண்டும் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் திகாமடுல்ல மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். எம். எம். முஷாரப் கோரிக்கை விடுத்துள்ளார்.
வார இறுதியில் நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அவர், நாடாளுமன்றத்தில் இந்த வார்த்தை அதிகமாக பயன்படுத்தப்பட்டதை தான் அவதானித்ததாக கூறினார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களை முன்னிலைப்படுத்தி முஸ்லிம் பயங்கரவாதம் பற்றி பேசும் எவரும் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகளை கட்டவிழ்த்து விடப்படுவதை சிங்கள பயங்கரவாதம் என ஏன் கூறுவதில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் கேள்வி எழுப்பினார்.
அரசியல் நலன்கள்
மதத்தின் பெயரால் பயங்கரவாதம் பற்றி பேசப்படும் போதெல்லாம், நாடாளுமன்றத்தில் பேசும் பெரும்பாலானவர்கள் முஸ்லிம் பயங்கரவாதத்தைப் பற்றி அதிகம் பேசுவதை நான் அவதானித்தேன்.
முதலில் இந்த நாடாளுமன்றம் போன்ற உயரிய சபைகளில் இருந்து இஸ்லாமிய பயங்கரவாதம், முஸ்லிம் பயங்கரவாதம் என்ற வார்த்தைகளை நீக்க வேண்டும்.
முஸ்லிம் பயங்கரவாதம் என்ற சொல்லுக்கு எதிராக அமைதி வழியில் போராடி வருவதாக கூறும் மக்கள் பிரதிநிதி, உலக நாடுகள் முஸ்லிம் பயங்கரவாதம் என்ற வார்த்தையை தமது அரசியல் நலன்களுக்காக பயன்படுத்தி இஸ்லாத்திற்கு எதிராக செயற்படுவதாகவும், முஸ்லிம்கள் பயங்கரவாதிகள் அல்ல எனவும் வலியுறுத்தினார்.
வன்முறைச் செயல்கள்
மேலும், இலங்கையில் நடத்தப்பட்ட உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல்களின் பின்னணியில் தேசிய, சர்வதேச மற்றும் அரசியல் சதி இருப்பதாக பல ஆய்வுகள் வெளிப்படுத்துவதாக அவர் குறிப்பிடுகின்றார்.
முஸ்லிம்களை பயன்படுத்தி இந்த நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்த முயற்சிகள் முன்னெடுக்கப்படுகின்றன. உலகம் முழுவதும் எவ்வாறு முஸ்லிம்கள் பயன்படுத்தப்படுகின்றார்களோ அவ்வாறு சில குழுக்கள் பயன்படுத்தப்பட்டன.
இலங்கையில் முஸ்லிம்களை இலக்கு வைத்து சிங்கள மக்களால் நடத்தப்பட்ட வன்முறைச் செயல்களை சிங்களப் பயங்கரவாதமாக குறிப்பிட முடியுமா? என நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பிய திகாமடுல்ல மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எஸ். எம். எம். முஷாரப் மதத்தின் பெயரிலான பயங்கரவாதத்தை முற்றிலுமாக ஒழிக்க நாடாளுமன்றத்தில் பல நல்ல சட்டங்கள் கொண்டுவரப்பட வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |