முடிந்தால் இதை செய்யுங்கள்! - நிதி அமைச்சர் விடுத்துள்ள கோரிக்கை
அடுத்த வருட இறுதிக்குள் வெளிநாடுகளில் கொண்டுவரப்படும் பால்மாவுக்காக செலவிடப்படும் நிதியை முடிந்தால் மீதப்படுத்தி தாருங்கள் என நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ கோரிக்கை விடுத்துள்ளார்.
இரசாயன உரங்களை இறக்குமதி செய்வதற்கு தனியார் இறக்குமதியாளர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள போதிலும் பசுமை விவசாயம் தொடர்பான அரசாங்கத்தின் கொள்கையில் மாற்றம் இல்லை என நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டு பேசிய அவர் இதனை கூறியுள்ளார். தொடர்ந்தும் பேசிய அவர், “இம்முறை வரவு செலவுத் திட்டம் நிறைவேற்றப்பட்டால் நாட்டில் புதிய மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என நான் கருதுகின்றேன்.
தற்போது நமது நாட்டில் அந்நிய செலாவணி பற்றாக்குறை உள்ளது. எங்களின் கையிருப்பில் இருந்த நிதியை அத்தியாவசிய உணவு, மருந்து, எரிபொருளை இறக்குமதி செய்வதற்கும், வெளிநாட்டுக் கடனை அடைப்பதற்கும் செலவு செய்தோம்.
குறிப்பாக கடந்த ஓராண்டில் நாட்டிற்கு வரும் அந்நிய செலாவணி கணிசமாக குறைந்துள்ளது. சமீப காலங்களில், ஒவ்வொரு ஆண்டும் 130,000 வெளிநாட்டு தொழிலாளர்கள் வெளிநாடுகளுக்கு அனுப்பப்பட்டனர்.
கடந்த ஆண்டு 53,000 ஆக குறைந்துள்ளது. அடுத்த ஆண்டு அதை 300,000 ஆக உயர்த்த முயற்சிக்கிறோம். இந்த ஆண்டு நமது நாட்டு மக்களுக்கு உணவு பாதுகாப்பு மற்றும் சத்தான உணவுகளை உற்பத்தி செய்ய பெரும் தொகையை ஒதுக்கீடு செய்துள்ளோம்.
பால் மா இறக்குமதியை நிறுத்தவும், நாட்டில் திரவப் பால் உற்பத்தியை அதிகரிக்கவும் அனைவரின் ஆதரவையும் கோருகிறேன். இந்த ஆண்டு வளர்ச்சி சார்ந்த வரவு செலவுத் திட்டத்தை தாக்கல் செய்துள்ளோம்.
அரசாங்க அதிபர்களுக்கு வரவு செலவுத் திட்டத்தில் 85,000 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும், பிரதேச சபை உறுப்பினர்கள், பிரதேச சபைகள், நாடாளுமன்ற, மாகாண சபை உறுப்பினர்களுக்கும் பணம் வழங்கப்பட்டுள்ளது.
இந்த நிதிகள் அனைத்தையும் பயன்படுத்தி நாட்டின் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்தக்கூடிய திட்டங்களை செயல்படுத்துவோம் என நம்புகிறோம். எந்த நேரத்திலும் கூடுதல் பணம் பெற முடியாது. புதிய வாகனங்கள் அல்லது பணியாளர்கள் பெற அனுமதி வழங்க முடியாது.
இந்த நாட்டில் பெருமளவிலான அரச ஊழியர்கள் உள்ளனர். சில பிரதேச செயலகங்களில் போதிய மேசை கதிரைகள் கூட இல்லை.
எனவே, இந்த மனித வளங்கள் அனைத்தையும் பயன்படுத்தி நாட்டை பாலில் தன்னிறைவு அடையச் செய்யவும், பால் மாவுக்காக செலவிடப்படும் அந்நிய செலாவணியை சேமிக்கவும் கால்நடை வளர்ப்பில் ஈடுபட்டுள்ள அனைவரின் ஆதரவையும் நான் கேட்டுக்கொள்கிறேன்” என நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்தார்.