சாந்தனுக்கு உயர் மருத்துவ சிகிச்சை அளிக்க கோரி விடுக்கப்பட்ட வேண்டுகோள்
உடல் நலக்குறைவால் திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சாந்தனுக்கு உயர் மருத்துவ சிகிச்சை அளிக்க வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட 7 பேரில், தமிழீழத்தை சேர்ந்த சகோதரர் சாந்தனும் ஒருவராவார். இவர் கடந்த 2022ஆம் ஆண்டு நவம்பர் மாதம் உயர்நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டார்.
தமிழ்நாடு அரசுக்கு கடிதம்
ஆனால், இவர் திருச்சி ஒன்றிய சிறை வளாகத்தில் உள்ள சிறப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளார். இவர் தமிழீழத்தை பூர்வீகமாக கொண்டவர் என்பதால் அவருடைய சொந்த நாட்டில் இருந்து ஒப்புதல் அளித்த பின் அவரை அனுப்புவதற்கான நடைமுறைகள் செயற்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், அதற்கான எந்த முன் முயற்சியும் தமிழ்நாடு அரசோ, ஒன்றிய அரசோ எடுக்காதது கவலை அளிக்கிறது. கடந்த சில மாதங்களாக திருச்சி முகாமில் இருக்கும் சாந்தன். தன்னை சொந்த நாடான இலங்கைக்கு செல்வதற்கு அனுமதிக்குமாறு தமிழ்நாடு அரசுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
அந்த கடிதத்தில் கடந்த 32 வருடங்களாக எனது தாயாரைப் பார்க்கவில்லை. அவருடைய இந்த முதுமையான காலத்தில் அவரோடு வாழ விரும்புகிறேன்.ஒரு மகனாக அவருக்கு உதவிகரமாக இருக்க ஆசைப்படுகிறேன் என அதில் கூறி உள்ளார்.
அத்துடன் தன்னை இலங்கைக்கு அனுப்பக் கோரி சென்னை மேல் நீதிமன்றத்திலும் அவர் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
உடனடி நடவடிக்கை
இந்த நிலையில், சாந்தனுக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டு, திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் செய்தி அதிர்ச்சியும், கவலையும் அளிக்கிறது.
உயர்நீதிமன்றால் கடந்த 2022ஆம் ஆண்டு விடுதலை செய்யப்பட்டும், முருகன், சாந்தன், ரொபட் பயாஸ், ரவிச்சந்திரன், ஜெயக்குமார் ஆகிய தமிழர்களை, திருச்சி சிறப்பு முகாமில் வைத்திருப்பது ஜனநாயகத்துக்கு விரோதமானது மனிதநேய மாண்பிற்கு எதிரானது.
எனவே, உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ள சாந்தனுக்கு, உயர் மருத்துவ சிகிச்சை அளிக்க தமிழ்நாடு அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் அத்துடன் முருகன், ரொபர்ட் பயஸ், ஜெயக்குமார் , சாந்தன் ஆகியோரை விடுவித்து, அவர்கள் விரும்பும் நாட்டிற்கு செல்ல தமிழ்நாடு அரசும், ஒன்றிய அரசும் அனுமதிக்க வேண்டும்”என கோரிக்கை விடுத்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |