யுத்தத்திற்குப் பின்னர் மூடிக்கிடக்கின்ற பாடசாலையை மீள இயங்கச் செய்ய நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை (Photo)
யுத்தத்திற்குப் பின்னர் மூடிக்கிடக்கின்ற பாடசாலையை மீள இயங்கச் செய்ய நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை முன்வைப்பதாக மட்டக்களப்பு மாவட்டத்தின் போரதீவுப்பற்று, 25ஆம் கிராமத்தின் கிராம அபிவிருத்திச் சங்கத்தின் முன்னாள் செயலாளர் சின்னப்பு நல்லையா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
ஒரு மனிதனுக்கு அடிப்படையாக அமைந்துள்ள இந்த கல்வியை தற்கால யுகத்தில் வழங்க வேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.
மட்டக்களப்பு மாவட்டத்தின் போரதீவுப்பற்று, பட்டிருப்பு வலயக் கல்வி அலுவலகத்திற்கு உட்பட்ட போரதீவுப்பற்றுக் கல்விக் கோட்டத்திற்குட்பட்ட பகுதியே 25ஆம் கிராமமாகும்.
1956 ஆம் ஆண்டு கல்லோயா திட்டத்தின் கீழ் குடியேற்றப்பட்ட ஆரம்ப காலம் முதல் அக்கிராமத்தில் “25 ஆம் கொலனி அரசினர் தமிழ் கலவன் பாடசாலை” ஒன்று இயங்கி வந்துள்ளது.
பின்னர் அப்பாடசாலைக் கட்டடம் யுத்த காலத்தில் 1990 ஆம் ஆண்டு காலப்பகுதியில் உடைத்து தகர்க்கப்பட்டதையடுத்து அரசாங்கத்தினால் புதிதாக பாடசாலைக் கட்டடம் ஒன்றும் நிர்மாணிக்கப்பட்டு பாடசாலை இயங்கிவந்துள்ளது.
பின்னர் மீண்டும் 2002 ஆம் ஆண்டு திறக்கப்பட்டு அங்குள்ள தமிழ் பாடசாலையில் தமிழ் மற்றும் சிங்கள மாணவர்கள் ஒன்று தொடக்கம் ஐந்தாம் ஆண்டு வரைக்கும் கல்வி கற்று வந்துள்ளனர்.
அதன் பின்னர் ஏற்பட்ட யுத்த சூழல் காரணமாக மீண்டும் அப்பாடசாலை 2004 ஆம் ஆண்டு மூடப்பட்டு இன்றுவரை திறக்கப்படாமலேயே உள்ளதாக அக்கிராமத்தைச் சேர்ந்த மக்கள் தெரிவிக்கின்றனர்.
இந்தப்பாடசாலையில் தான் நான் எனது ஆரம்பக்கல்வியைக் கற்றேன். பின்னர் 1983ஆம் ஆண்டு ஜுலைக் கலவரத்தினால் இப்பாடசாலையின் நடவடிக்கைகள் தடைப்படிருந்தன.
பின்னர் மீண்டும் இயங்கியது. மீண்டும் யுத்தம் ஏற்பட அதிலிருந்து மூடப்பட்ட பாடசாலை இன்றுவரை அவ்வாறே காணப்படுகின்றது.
எனவே இப்பாடசாலையை மீண்டும் திறந்து வைத்து அப்பாடசாலையை மீள இயங்க வைப்பதற்குரிய நடவடிக்கையை சம்மந்தப்பட்டவர்கள் மேற்கொள்ள வேண்டும்.
தற்போது எமது கிராமத்தைச் சேர்ந்த பிள்ளைகள் மிகவும் நீண்ட தூரம் பயணித்து தமது கற்றல் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அக்கிராம மக்கள் யுத்த காலத்தில் பலமுறை இடம்பெயர்ந்து, பல இடங்களிலும் வாழ்ந்து வந்த நிலையில் மீண்டும் 2007ஆம் ஆண்டு மீளக் குடியமர்ந்துள்ளனர்.
அக்காலத்தில் அங்குள்ள மாணவர்களின் கற்றல் நடவடிக்கைகளும், முற்றாகப் பாதிக்கப்பட்டிருந்ததோடு அக்கிராமத்திலிருந்த பாடசாலையும் மூடப்பட்ட நிலையில் உள்ளது.
எனினும் அங்குள்ள மக்கள் மிகத் தொலைவிலுள்ள சங்கர்புரம், அம்பாறை மாவட்டத்திலுள்ள றாணமடு 11 ஆம் கொலனி, உள்ளிட்ட பாடசாலைகளுக்கு அடர்ந்த காட்டுப்பகுதியினூடாக, காட்டுயானைகளுக்குப் பயந்து பயந்து, குன்றும், குழியுமான வீதியூடாகச் சென்று கல்வி கற்று வருவதாகத் தெரிவிக்கின்றனர்.
தற்போது அப்பகுதியில் நிலைகொண்டிருந்த கோர யுத்தம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டு 12 வருடங்களைக் கடந்துள்ள போதிலும், இப்பாடசாலை திறக்கப்படாமை குறித்து அங்குள்ள மக்கள் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வாழ்ந்து வருகின்றனர்.
இந்நிலையில் குறித்த பாடசாலையை மீளத்திறப்பதாயின் அப்பகுதியில் தற்போதுள்ள பிள்ளைகளின் எண்ணிக்கை, மற்றும் தேவைகள் குறித்து தமக்கு எழுத்து மூலம் அறியத்தரும் பட்சத்தில் அது தொடர்பில் பரிசீலிக்கப்படும் என கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் நகுலேஸ்வரி புள்ளநாயகத்தைத் தொடர்பு கொண்டு கேட்டபோது தெரிவித்தார்.
கிழக்கு மாகாண கல்விப் பயிப்பானர் நகுலேஸ்வரி புள்ளநாயகமின் கருத்திற்கிணங்க குறித்த 25 ஆம் கிராம மக்கள் அப்பகுதியிலுள்ள மாணவர்களின் தொகை, தற்போது அங்குள்ள மாணவர்கள் எங்கு சென்று தமது கல்வித் தேவையைப் பூர்த்தி செய்கின்றார்கள், அதற்கிடையிலான தூரம், உள்ளிட்ட விபரங்களை கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளருக்கு எழுத்து மூலம் அனுப்பி வைக்கப்படும் பட்சத்தில் அது எதிர்காலத்தில் நிறைவேற வாய்ப்புள்ளதாக அறிய முடிந்தாலும், சம்பந்தப்பட்ட அதிகாரிகளும், மக்கள் பிரதிநிதிகளும் 25ஆம் கிராம மக்களின் கல்வி வளர்ச்சி உந்து சக்தியுடன் செயற்படல் வேண்டும் என்பதையே அப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றார்கள் என தெரிவித்துள்ளார்.






