ஜனாதிபதிக்கு தோட்ட தொழிலாளர்கள் சார்பில் கோரிக்கை
பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் உள்ளிட்ட ஏனைய நலன்புரி பிரச்சினைகளுக்கு தீர்வுகான கூட்டு ஒப்பந்தத்தை மீளவும் கையெழுத்திடுமாறு தொழிற்சங்கங்கள் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளன.
இந்த கூட்டு ஒப்பந்தம் மீண்டும் அமுல்படுத்தப்படுவதன் மூலம் தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்து அவல வாழ்க்கை வாழ்ந்து வரும் தோட்டத் தொழிலாளர்களுக்கு ஓரளவு நீதி கிடைக்கும் என ஒன்றிணைந்த தொழிற்சங்க நிலையம் சுட்டிக்காட்டியுள்ளது.
தோட்ட தொழிலாளர்களின் கோரிக்கை
இது தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ள கூட்டு தொழிற்சங்க நிலையத்தின் செயலாளர் எஸ்.இராமநாதன், இன்று தோட்டத் தொழிலாளர்கள் எதிர்நோக்கும் சிரமங்களுக்கு கடந்த அரசாங்கமே பொறுப்பு என வலியுறுத்துகின்றார்.
தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளத்தை 1,000 ரூபாயாக அதிகரிப்பதற்கான பரிந்துரை சம்பளக் கட்டுப்பாட்டு சபைக்கு அனுப்பி வைக்கப்பட்டதையடுத்து, தோட்ட முதலாளிமார் சம்மேளனம் அதற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுத்தது.
இதேவேளை, தோட்டத் தொழிற்சங்கங்கள், முதலாளிகள் மற்றும் அரசாங்கத்திற்கு இடையிலான கூட்டு ஒப்பந்தம் இரத்து செய்யப்பட்டு, தொழிலாளர் சம்பளம் தொடர்பான நீதிமன்ற நடவடிக்கைகள் இரண்டு வருடங்களாக இழுத்தடிக்கப்பட்டு வருகின்றன.
ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவின் ஆட்சிக்காலத்தில் ஆரம்பிக்கப்பட்ட தோட்ட கூட்டு ஒப்பந்தத்திற்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கம் மற்றும் கூட்டு தோட்ட தொழிற்சங்க நிலையம் என்பன பங்களிப்பு செய்கின்றன. `
பொருளாதார பிரச்சினை
அத்தியாவசிய உணவு பொருட்கள் மற்றும் மருந்து பொருட்களின் விலை இருமடங்காக உயர்த்தப்பட்டுள்ளதாலும், ஏனைய போக்குவரத்து கட்டணங்கள் இரட்டிப்பாகியுள்ளதாலும் தோட்ட தொழிலாளர்கள் தமது பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்புவதற்குக் கூட சிரமப்படுகின்றனர்'' என கூட்டுத் தோட்ட தொழிற்சங்க நிலையத்தின் செயலாளர், ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த நிலையில் இருந்து சிறிதளவாவது நிவாரணம் கிடைக்க வேண்டுமானால் சம்பள
பிரச்சினைக்கான தீர்வுகள் காணப்பட வேண்டும் எனவே கூட்டு ஒப்பந்தத்தை உடனடியாக
அமுல்படுத்துமாறு பெருந்தோட்ட தொழிற்சங்க நிலையம் கோரியுள்ளது.