ஊடகங்கள் மீதான அடக்குமுறையை ஏற்றுக்கொள்ள முடியாது: வியாழேந்திரன் ஆவேசம்(Video)
ஊடகங்கள் மீதான எந்தவிதமான அடக்குமுறைகளையும் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளமுடியாது என நாடாமன்ற உறுப்பினர் வியாழேந்திரன் தெரிவித்துள்ளார்.
இன்றையதினம்(15.06.2023) இடம்பெற்ற மட்டக்களப்பு- மண்முனை வடக்கு பிரதேச அபிவிருத்தி மீளாய்வுக்கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் அவர் தெரிவிக்கையில்,
மட்டக்களப்பு மாவட்டத்தில் டெங்கு நோய் தாக்கம் அதிகமாகவுள்ள பகுதிகளில் விசேட நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும்.
கடவுச்சீட்டு அலுவலகங்கள்
ஜனாதிபதியின் மக்கள் நலன்திட்டத்தின் கீழ் மாவட்டங்கள் தோறும் கடவுச்சீட்டைபெற்றுக்கொள்வதற்கான அலுவலகங்கள் திறக்கப்படும்.
மேலும் இந்த கூட்டத்தில்,
மண்முனை வடக்கு பிரதேச செயலகப்பிரிவில் முன்னெடுக்கப்படும் செயற்றிட்டம் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டது.
குறிப்பாக டெங்கின் தாக்கம் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டதுடன் கைவிடப்பட்ட கிணறுகள் மற்றும் கைவிடப்பட்டுள்ள வீடுகள் குறித்தும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது.
அத்துடன் மாநகரசபையின் செயற்பாடுகள், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் செயற்பாடுகள் உட்பட பிரதான மக்கள் சேவை நிலையங்கள் குறித்தும் ஆராயப்பட்டன.
இந்த கூட்டத்தில் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான கோவிந்தன் கருணாகரம்,இரா.சாணக்கியன் மற்றும் இராஜாங்க அமைச்சர் சந்திரகாந்தனின் இணைப்புச்செயலாளர் பூ.பிரசாந்தன் உட்பட திணைக்களங்களின் தலைவர்கள்,உயர் அதிகாரிகள் என பல்வேறு தரப்பினரும் கலந்துகொண்டனர்.
போரதீவுப் பற்றுப் பிரதேச கூட்டம்
இதுமட்டுமன்றி குழுத் தலைவர் இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் தலைமையில் மட்டக்களப்பு-போரதீவுப் பற்றுப் பிரதேச அபிவிருத்திக் குழுக் கூட்டமும் இடம்பெற்றுள்ளது.
இந்த கூட்டத்தில் திக்கோடை கிராமத்தில் சேதன உர உற்பத்திக்கு வழங்கப்பட்ட காணிக்கு பதிலாக மாற்றுக் காணியை வழங்குதல், வம்மியடியூற்று கிராம மக்களின் எல்லைப்பிரச்சனை, அப்பகுதியிலுள்ள கதிரவன் மாற்றுத்திறனாளிகளின் பிரதிநிதிகளுக்கு பிரதேச அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் கலந்து கொள்ள அனுமத்தித்தல், கோவில்போரதீவு பாடசாலைக்கு முன்னால் வீதித் தடை போடுதல், வீதி அபிவிருத்தி, சுகாதாரம், கல்வி, விவசாயம், உள்ளிட்ட பல தீர்மானங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டுள்ளன.
மேலதிக செய்தி-ருசாத்
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |













