தோட்டக் கம்பனிகளின் பிரித்தாளும் சூழ்ச்சிக்குள் தொழிலாளர்கள் சிக்கிவிடக்கூடாது! ஜீவன் தொண்டமான் அறிவிப்பு(Video)
தோட்டக் கம்பனிகளின் பிரித்தாளும் சூழ்ச்சிக்குள் தொழிலாளர்கள் சிக்கிவிடக்கூடாது. ஒன்றிணைந்து - ஒருமித்த நோக்குடன் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுத்தால் வெற்றி நிச்சயம். தொழிலாளர்களுக்கு பக்கபலமாக நாம் நிற்போம் என இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.
மஸ்கெலியா பெருந்தோட்டத்தின் கீழ் இயங்கும் தோட்டங்களின் தோட்ட தொழிலாளர்கள் கடந்த சில நாட்களாக தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் நேற்று (18.09.2022) மஸ்கெலியா அம்பாள்ஸ் மண்டபத்தில் குறித்த தோட்ட தொழிலாளர்களை ஜீவன் தொண்டமான், சந்தித்து கலந்துரையாடிய பின் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
இந்த சந்திப்பில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தவிசாளரும், நிதி செயலாளரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ராமேஷ்வரன், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான், முன்னாள் மத்திய மாகாண சபை உறுப்பினர்களான ஏ.பி.சக்திவேல், ஏ.பிலிப்குமார், கணபதி கனகராஜ், கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள், உப தலைவர்கள், மஸ்கெலியா பிரதேச சபை தலைவர் மற்றும் உறுப்பினர்கள் என பல முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டனர்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,
மஸ்கெலியா பெருந்தோட்ட நிறுவனமானது, தொழிலாளர்களை துன்புறுத்திவருகின்றது. இந்நிலையில் தமது தொழில்சார் உரிமைகளுக்காக தொழிலாளர்கள் தொழிற்சங்க நடவடிக்கையில் இறங்கியுள்ளனர்.
தொழிற்சங்கங்களுக்கு கிடைத்துள்ள வெற்றி
நாமும் அதற்கு பக்கபலமாக இருக்கின்றோம். எதற்காக தற்போது தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்படுகின்றது என நீங்கள் கேட்கலாம். ஆயிரம் ரூபா தொடர்பான வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்தது.
அதனால்தான் நாம் நடவடிக்கையில் இறங்கவில்லை. தற்போது நீதிமன்றத்தின் தீர்ப்பு வெளிவந்துள்ளது. தொழிற்சங்கங்களுக்கு வெற்றி கிடைத்துள்ளது.
எமது கோரிக்கை நியாயமானது. அதனால்தான் போராடுகின்றோம். நாளை நாம் சம்பள நிர்ணய சபைக்கு சென்றால்கூட எமக்குதான் சாதகமாக அமையும். தோட்டத் தொழிலாளர்கள் மற்றும் தொழிற்சங்கங்களுக்கிடையில் ஒற்றுமை இருக்க வேண்டும்.
அவ்வாறு ஒற்றுமை இருப்பது எமக்கு பலம். எனினும், அந்த ஒற்றுமை எம்மிடையே முழுமையாக இல்லை. அது எமது பலவீனமாகும். எமது இந்த பலவீனம் நிர்வாகத்துக்கு சாதகமாக அமைந்துவிடுகின்றது. எமது ஒற்றுமையை கண்டு தோட்ட நிர்வாகங்கள் நடுங்க வேண்டும்.
நிலைமை மாற வேண்டும்
ஆயிரம் ரூபாவை ஓரணியில் நின்று கேட்க வலியுறுத்தினோம். அச்சத்தால் தொழிலாளர்கள் பிளவுபட்டு நின்றனர். துரைமாரை கண்டு அஞ்ச வேண்டியதில்லை. கட்சி, தொழிற்சங்க பேதங்களும் அவசியமில்லை. தொழில்சார் உரிமைகளுக்காக தொழிலாளர்கள் ஒற்றுமையாக - ஒழுக்கமாக செயற்பட வேண்டும்.
மக்கள் ஒன்றிணைந்து நாட்டின் ஜனாதிபதியையே மாற்றினர். எனவே, ஒற்றுமையின் வலிமையை புரிந்துகொள்ள வேண்டும். மலையகத்துக்கு திடீரென வரும் சில அரசியல்வாதிகள், தொழிற்சங்கங்களை விமர்சிப்பார்கள், ஆனால் கம்பனிகளை விமர்சிப்பதில்லை.
அப்படியானவர்கள் கூறும் கருத்தை எம்மவர்களில் சிலர் நம்புவதும் உண்டு. இந்நிலைமையும் மாற வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.