ஐநாவில் இலங்கை குறித்து மனித உரிமைகள் ஆணையர் வெளியிட்ட சிறப்பு அறிக்கை!
காணாமல் ஆக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்களின் குடும்பங்களின் உரிமைகளை அங்கீகரித்து, பாதிக்கப்பட்டவர்களின் நிலை அல்லது இருப்பிடத்தை அவசரமாக நிர்ணயம் செய்து, குற்றவாளிகளை நீதியின் முன் நிறுத்தவும், இழப்பீடு வழங்கவும் இலங்கை அரசாங்கத்தை ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் மிச்சேல் பச்லெட் வலியுறுத்தியுள்ளார்.
ஜெனீவாவில் இன்று நடைபெற்ற மனித உரிமைகள் பேரவையின் 49வது அமர்வில் இலங்கை தொடர்பான விவாதத்தின் போது தனது அறிக்கையை வெளியிட்டு உரையாற்றிய அவர் இதனை கூறியுள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,
“இலங்கை குறித்து ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவை கவனத்தை செலுத்துவதற்கான முக்கிய தேவை உள்ளது. கடந்த வருடம் பொறுப்ப்புக்கூறலிற்கான மேலும் தடைகளும் பின்னடைவுகளும் காணப்பட்டன பாதிக்கப்பட்டவர்களுக்கும் அவர்களின் குடும்பத்தவர்களிற்கும் தொடர்ந்தும் நீதி மறுக்கப்படுகின்றது.
பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் சில விதிகளைத் திருத்துவதற்கும் சட்டத்தின் கீழ் சில கைதிகளை விடுதலை செய்வதற்குமான முன்மொழிவுகள் வரவேற்கத்தக்க ஆரம்ப நடவடிக்கைகளாகும்.
பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கும், தண்டனையிலிருந்து விடுபடுவதற்கும், கடந்த கால மீறல்கள் மீண்டும் நிகழாமல் தடுப்பதற்கும், ஆழமான சட்ட, நிறுவன மற்றும் பாதுகாப்புத் துறை சீர்திருத்தங்களை மேற்கொள்ளவும் அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளார்.
வருந்தத்தக்க வகையில், கடந்த ஆண்டு பொறுப்புக்கூறலுக்கு மேலும் தடைகள் மற்றும் பின்னடைவுகளை கண்டுள்ளது என்று மனித உரிமைகள் ஆணையர் தெரிவித்துள்ளார். “பாதிக்கப்பட்டவர்களுக்கும் அவர்களது குடும்பங்களுக்கும் உண்மையும் நீதியும் தொடர்ந்து மறுக்கப்படுகிறது.
தனது பெப்ரவரி 2021 அறிக்கை மனித உரிமைகளை அச்சுறுத்தும் பல அடிப்படைப் போக்குகளை அடையாளம் கண்டுள்ளதாக உயர்ஸ்தானிகர் குறிப்பிட்டார். "இந்தப் போக்குகள் தொடர்ந்து முன்னேறி வருகின்றன.
" உள்நாட்டில் வடிவமைக்கப்பட்ட மற்றும் செயல்படுத்தப்பட்ட நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறல் செயல்முறையை" தொடர்வதற்கான அர்ப்பணிப்புகளை வெளிப்படுத்தி இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகும், அரசாங்கம் இன்னும் பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கத்தை நோக்கிய நிலைமாறுகால நீதிக்கான நம்பகமான பாதை வரைபடத்தை உருவாக்கவில்லை என்று அவர் கூறினார்.
பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பங்கள், உண்மை மற்றும் நீதிக்காக அழைப்பு விடுப்பதோடு, அவர்களின் அன்புக்குரியவர்களை நினைவுகூர முற்படும் துன்பங்கள் மற்றும் வேதனைகள் குறித்து கவலையடைவதாக ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் கூறினார்.
"அரசு அவர்களின் உரிமைகளை அங்கீகரிக்கவும் குற்றவாளிகளை நீதியின் முன் நிறுத்தவும் மற்றும் இழப்பீடு வழங்கவும் நான் அரசாங்கத்தை கேட்டுக்கொள்கிறேன்," என்று அவர் கூறினார்.
"சிவில் சமூக அமைப்புகள், மனித உரிமைகள் பாதுகாவலர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் மீதான கண்காணிப்பு, துன்புறுத்தல் மற்றும் அச்சுறுத்தல் பற்றிய தொடர்ச்சியான அறிக்கைகளால் ஆழ்ந்த கவலையடைகிறேன்."
"பொலிஸ் தடுப்பு காவலில் இருக்கும் போது ஏற்படும் மரணங்கள் மற்றும் என்கவுன்டர் போன்ற மீண்டும் மீண்டும் நடக்கும் சம்பவங்கள் கவலையளிக்கின்றன.
பொலிஸ் மற்றும் இராணுவத்தினரால் மோசமாக நடத்தப்பட்ட மற்றும் சித்திரவதை செய்யப்பட்டதாக தொடர்ந்து குற்றச்சாட்டுகளைப் பெறுகிறோம். இது அடிப்படை பாதுகாப்புத் துறை சீர்திருத்தங்களின் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டுகிறது,” என்று அவர் கூறினார்.