இலஞ்ச ஊழல் ஆணைக்குழு பணிப்பாளரை நீக்கக்கோரி உயர் நீதிமன்றில் மனு தாக்கல்
இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகமாக கனிஸ்க டி.விஜேரத்னவை நியமித்ததை எதிர்த்து, ட்ரான்பேரன்ஸி இன்டர்நெசனல் இலங்கையின் உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமைகள் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளது.
முன்னதாக 2020 ஜனவரியில் இருந்து ஆணைக்குழுவின் பணிப்பாளராக பணியாற்றிய விஜேரத்ன, புதிய ஊழல் எதிர்ப்புச் சட்டம் இயற்றப்பட்டதைத் தொடர்ந்து, 2024 ஏப்ரல் 2 அன்று மீண்டும் அதே பதவிக்கு நியமிக்கப்பட்டார்.
சட்ட ரீதியான தேவைகள்
இந்தநிலையில் விஜேரத்னவின் நியமனம் ஊழல் எதிர்ப்புச் சட்டத்தின் விதிகளை மீறுவதாகவும், நடைமுறை ஒருமைப்பாடு மற்றும் வெளிப்படைத்தன்மைக்கு எதிரானது என்றும் , ட்ரான்பேரன்ஸி இன்டர்நெசனல் வாதிட்டுள்ளது.
எனவே இந்த நியமனத்தை இரத்துச் செய்யுமாறு மனுதாரர் தரப்பு நீதிமன்றத்தைக் கோருகிறது அல்லது மாற்றாக விஜேரத்னவை நீக்கிவிட்டு சட்டத்திற்கு இணங்க புதிய ஒருவரை நியமிக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும் என்று மனுதாரர் தரப்பு கேட்டுள்ளது.
குறித்த நியமன பாத்திரத்திற்கான அனைத்து சட்டரீதியான தேவைகள் மற்றும் அளவுகோல்கள் பூர்த்தி செய்யவில்லை என்றும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சட்டத்தின் ஆட்சி மற்றும் அரசியலமைப்பை நிலைநிறுத்துவதற்காக, பொது நலன் கருதி இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக மனுதாரர் தரப்பு குறிப்பிட்டுள்ளது.
அத்துடன் இந்த மனுவின் விசாரணை மற்றும் இறுதித் தீர்ப்பு வரும், வரையில் கனிஸ்க டி விஜேரத்ன பணிப்பாளராக செயல்படுவதைத் தடுக்கும் இடைக்கால உத்தரவை பிறப்பிக்குமாறு உயர் நீதிமன்றத்தை ட்ரான்பேரன்ஸி இன்டர்நெசனல் வலியுறுத்தியுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |