ஹட்டனில் அனுமதியற்ற கடைகள் அகற்றம்: வியாபாரிகள்- நகரசபை அதிகாரிகள் இடையே முறுகல்
ஹட்டன் டிக்கோயா நகர சபைக்குச் சொந்தமான சந்தை வளாகத்திலுள்ள சட்டவிரோத கட்டுமானங்களை அகற்றும் நடவடிக்கைகள் இன்று (19.11.2026) முன்னெடுக்கப்பட்டன.
இந்தக் கட்டுமானங்களை அகற்ற முற்பட்டபோது அவ்விடத்தில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டதுடன், சில வியாபாரிகள் தமது சட்டவிரோத கட்டுமானங்களை அகற்றிக்கொள்வதற்கு நகர சபைக்குத் தமது ஒத்துழைப்பை வழங்கியிருந்தனர்.எனினும் சிலர் எதிர்ப்பினையும் தெரிவித்தனர்.
சட்ட விரோத கட்டங்கள் காரணமாக ஹட்டன் டிக்கோயா நகரசபை பகுதியில் பலர் பல்வேறு நெருக்கடிக்களுக்கு முகம் கொடுத்து வந்துள்ளதுடன் மண் சரிவு வெள்ள அனர்த்தம் உள்ளிட்ட காரணகாளால் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மக்கள் கோரிக்கை
இப்பிரச்சினைக்கு உரிய தீர்வைப் பெற்றுக்கொடுக்குமாறு கடந்தகால மற்றும் தற்போதைய நகர சபை நிர்வாகங்களிடம் பொதுமக்கள் பலமுறை எழுத்துமூல கோரிக்கைகளை முன்வைத்திருந்தனர்.
இந்நிலையில், எவ்வித பாகுபாடுமின்றி சட்டவிரோத கட்டுமானங்களை அகற்றி, பொதுமக்களின் பாதுகாப்பையும் நலனையும் உறுதிப்படுத்த வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

இதற்கமைய, ஹட்டன் – டிக்கோயா நகர சபையின் தலைவர் அசோக கருணாரத்ன மற்றும் ஆளும், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இணைந்து எடுத்த தீர்மானத்திற்கு அமைவாகவே இந்த அகற்றும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
ஹட்டன் பொலிஸ் நிலையத்தின் சுற்றாடல் பிரிவு அதிகாரிகள் மற்றும் நகர சபை ஊழியர்களின் பங்களிப்புடன் இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
நீண்டகாலமாக அனுமதியற்ற முறையில் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்தவர்கள், தங்களுக்கு வியாபாரம் செய்வதற்கு மாற்று இடமொன்றை வழங்கிய பின்னரே, தங்களது கட்டுமானங்களை அகற்ற நகரசபை நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.





