கடந்த வருடம் கைதான இந்திய கடற்றொழிலாளர்களுக்கு விளக்கமறியல் நீடிப்பு
இழுவைமடியைப் பயன்படுத்தி எல்லை தாண்டி கடற்றொழிலில் ஈடுபட்டமைக்கு கடந்த வருடம் கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டு பன்னிரெண்டு காரைக்கால் கடற்றொழிலாளர்களுக்கு விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.
தடைசெய்யப்பட்ட இழுவைமடியைப் பயன்படுத்தி எல்லை தாண்டி கடற்றொழிலில் ஈடுபட்ட போது கடந்த வருடம் நவம்பர் 11ஆம் திகதி வடமராட்சி கடற்பகுதியில் வைத்து கடற்படையினரால் பன்னிரெண்டு காரைக்கால் கடற்றொழிலாளர்கள் கைதுசெய்யப்பட்டு நவம்பர் 13ஆம் திகதி பருத்தித்துறை நீதிமன்றில் நீரியல்வளத் துறை அதிகாரிகளினால் முற்படுத்தப்பட்டனர்.
கடமைக்கு இடையூறு
குறித்த கைதின் போது கடற்படை அதிகாரிகளைத் தாக்கி கடமைக்கு இடையூறு விளைவித்தமை மற்றும் படகிற்கு சேதம் ஏற்படுத்தியிருந்தமை தொடர்பில் கடற்படையினரால், பருத்தித்துறை காவல் நிலையத்தில் பிறிதொரு முறைப்பாடு பதிவுசெய்யப்பட்டது.
எல்லை தாண்டி கடற்றொழிலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் நீரியல்வளத் திணைக்களத்தினரால் தொடரப்பட்ட வழக்கில் கடந்த நவம்பர் 2ஆ7ம் திகதி 11 இந்திய கடற்றொழிலாளர்களுக்கும் நிபந்தனையுடன் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
ஆனாலும், கடற்படையினரைத் தாக்கியமை தொடர்பில் பருத்தித்துறை பொலிஸாரினால் தொடரப்பட்ட வழக்கில் கடற்றொழிலாளர்கள், தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.
இந்நிலையில், குறித்த வழக்கு நேற்று (01) பருத்தித்துறை நீதிமன்றில் நீதவான் கிரிசாந்தன் பொன்னுத்துரை முன்னிலையில் எடுத்துக் கொள்ளப்பட்டது. இதன் போது கடற்றொழிலாளர்கள் தமது குற்றத்தை ஒப்புக் கொண்டுள்ளனர்.
ஆகவே, இந்திய கடற்றொழிலாளர்கள் மீதான குற்றப் பத்திரத்தினை தாக்கல் செய்யுமாறு நீதவான் பருத்தித்துறை பொலிஸாருக்கு பணித்துள்ளதுடன் எதிர்வரும் எட்டாம் (8) திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.
எனவே, எதிர்வரும் எட்டாம் திகதி சட்டமா அதிபரின் ஆலோசனைக்கு அமைய பருத்தித்துறை பொலிஸாரினால் குற்றப் பத்திரம் தாக்கல் செய்யப்படவுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |