மணலாற்றில் வழிப் பிள்ளையார் வழிபாடும் நீராவியடி பிள்ளையார் முரண்பாடும்: சிந்திக்க தூண்டும் விடயங்கள்
மணலாறு(வெலிஓயா) பிரதேச செயலகத்தின் நிர்வாக எல்லைக்குள் வரும் புல்மோட்டை வீதியில் பல இடங்களில் பிள்ளையார் கோவில்கள் காணப்படுகின்றன.
சைவ மக்களின் வழிபாட்டிடங்களில் புத்தர் சிலைகளை வைத்து முரண்பாடுகளை தோற்றுவிக்கும் ஒரு பகுதி சிங்கள மக்களின் செயற்பாடுகளிடையே இந்த பிள்ளையார் கோவில்கள் சிங்கள மக்களால் வைத்து வழிபடப்பட்டு வருவது தொடர்பில் சிந்திக்கத் தூண்டுவதாக சமூகவிடய ஆய்வாளர் சுட்டிக் காட்டுகின்றார்.
முல்லைத்தீவில்(Mullaitivu ) இருந்து புல்மோட்டைக்குச் செல்லும் யார் ஒருவராலும் குறைந்தது பத்து பிள்ளையார் ஆலயங்களை கடந்து பயணிக்க வேண்டிய சூழல் ஏற்படும்.
இவை அனைத்தும் சிங்கள மக்கள் செறிந்து வாழும் பகுதிகளில் காணப்படுகின்றன.
வீதிகளில் பிள்ளையார் கோவில்களை வைத்து வழிபடுவது இலங்கையில் இயல்பான செயற்பாடாகும்.
பிள்ளையார் ஆலயங்கள்
இலங்கையில் உள்ள பிள்ளையார் ஆலயங்களில் இரண்டு வகை இருப்பதனை அவதானிக்கலாம். ஒன்று கிழக்குப் பிள்ளையார் ஆலயங்கள் மற்றையது மேற்குப் பிள்ளையார் ஆலயங்கள்.
கிழக்கு நோக்கி பார்த்தவாறு அமைக்கப்பட்ட பிள்ளையார் ஆலயங்களை கிழக்குப் பிள்ளையார் ஆலயங்கள் என்று வகைக்குறித்து நோக்கலாம். பொதுவாகவே தமிழர்களின் பிள்ளையார் ஆலயங்கள் கிழக்கு நோக்கியதாகவே அமைந்திருக்கும்.
மேற்குத் திசை நோக்கிப் பார்த்தவாறு இருக்கும் பிள்ளையார் ஆலயங்கள் மேற்குப் பிள்ளையார் ஆலயங்கள் என்று வகைக்குறித்து நோக்கலாம். பொதுவாக சிங்கள மக்களின் வழிபாடுகளில் அரிதாக மேற்குப் பிள்ளையார் கோவில் வழிபாட்டு முறைகளை அவதானிக்க முடிகின்றது என சமூக விட ஆய்வுகளில் கற்றலில் ஈடுபட்டுவரும் ஆய்வாளர் குறிப்பிடுகின்றார்.
எனினும் தமிழ் மக்களிடையே மேற்குப் பிள்ளையார் வழிபாட்டு முறைகள் இருப்பதில்லை என பிள்ளையார் ஆலய குருக்கள் ஒருவருடன் இது தொடர்பில் மேற்கொண்ட உரையாடலின் போது அவர் குறிப்பிட்டிருந்தார்.
மேற்குப் பிள்ளையார் கோவில்
புல்மோட்டைக்கு செல்லும் பாதையில் ஒரேயொரு மேற்குப் பிள்ளையார் கோவில் மட்டும் இருப்பதையும் இங்கே குறிப்பிடல் பொருத்தமானதாகும்.
மணலாறு நோக்கிய பாதையில் பயணப்பட்டு புல்மோட்டைக்கு திரும்பும் சந்தியில் இந்த மேற்குப் பிள்ளையார் ஆலயம் இருக்கின்றது.
இது போன்றதொரு மேற்குப் பிள்ளையார் கோவில் முல்லைத்தீவு - புளியங்குளம் வீதியில் களிக்காட்டுப் பகுதியிலும் காணப்படுகின்றது.
இந்த களிக்காட்டு மேற்குப் பிள்ளையார் கோவில் களிக்காட்டில் இருந்த இராணுவ முகாம் இராணுவத்தினரால் வழிபடப்பட்டு வந்து இப்போது பொதுமக்களால் வழிபடப்பட்டு வருவதாக களிக்காட்டு வயல் நில விவசாயி ஒருவர் குறிப்பிட்டார்.
முல்லைத்தீவு கரைத்துறைப்பற்று பிரதேச செயலகத்தின் மேற்கு வாசல் பக்கத்தில் முல்லைத்தீவு மாங்குளம் வீதியைப் பார்க்கும் வண்ணம் உள்ள பிள்ளையார் கோவிலும் மேற்குப் பிள்ளையார் கோவில் இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
இங்கே சுட்டப்படும் எல்லா வகையான பிள்ளையார் கோவில்களும் வழிப்பிள்ளையார் ஆலயங்களாகும். இவை ஆகம விதிப்படி வழிபடப்படாது கிராமிய வழிமுறையில் வழிபடப்பட்டு வருவதாக குமுழமுனையைச் சேர்ந்த பிரதேச விடயங்கள் தொடர்பாக தெளிவாக பேசவல்ல ஓய்வுபெற்ற அரச உத்தியோகத்தர் ஒருவர் குறிப்பிட்டார்.
முரண்பாடுகள் எப்படி தோன்றுகின்றன
பிள்ளையார் ஆலயத்தில் புத்தரை வைத்து விட்டு இது புத்த மதத்திற்குரிய இடம் என முரண்டு பிடித்து இனங்களுக்கிடையே சண்டைகளை மூட்டி வரும் போக்கு மணலாற்றுப் பகுதியில் அவதானிக்க முடிகின்றது.
செம்மலை நீராவியடிப் பிள்ளையார் ஆலயத்தில் பெரிய புத்தர் சிலையை நிறுவி விகாரை அமைக்க முற்பட்டு முரண்பட்ட செய்திகள் கடந்த காலங்களில் பேசுபொருளாக இருந்தமையினை இங்கே குறிப்பிடலாம்.
புல்மோட்டைக்கு திரும்பும் சந்தியிலும் ஆலமரத்துக்கு கீழுள்ள பிள்ளையார் கோவிலில் புத்தர் சிலையை வைத்திருந்ததையும் இங்கு நோக்கத்தக்கது.
எனினும் ஜனகபுரத்தில் ஒரு பிள்ளையார் கோவிலின் மேல் புத்தர் சிலைகள் கவனிப்பாரற்று இருக்கும் வேளை வழிபாட்டுக்குரிய கடவுளாக பிள்ளையார் இருப்பதையும் அவதானிக்க முடிகின்றது.
இத்தகைய அவதானிப்புக்கள் மூலம் சிங்கள மக்கள் சிலரால் புத்தரை சைவ ஆலயங்களில் வைத்து விட்டு முன்னெடுக்கப்படும் அத்தனை முயற்சிகளும் மக்களிடையே முரண்பாடுகளை தக்க வைத்து அரசியல் இலாபம் தேடும் ஒரு முயற்சியாகவே இருக்கும் என சமூகவிட ஆய்வாளர் வரதனுடனான கலந்துரையாடலில் அவர் குறிப்பிட்டிருந்தார்.
பொருத்தமான நெறியாளுகை அவசியம்
மக்களிடையே அமைதியான வாழ்க்கை முறையொன்றினைக் கட்டியெழுப்பும் உள்ளார்ந்த நல்லெண்ணம் கொண்ட சிறந்த அரசியல் நெறியாளுகை ஒன்று அவசியமாகின்றது.
இலங்கையில் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றம் நிகழ்ந்த மணலாற்றுப் பகுதியில் ஒரு குறித்த வீதியின் அவதானிப்பிலேயே மதங்களுக்கிடையிலான முரண்பாடுகள் திட்டமிட்டே உருவாக்கப்படுகின்றன என்ற சந்தேகம் வலுவாக தோன்றும் போது இலங்கை முழுவதுமான அவதானிப்புக்களும் கடந்த காலங்களில் இலங்கையில் நடந்த நிகழ்வுகளின் வரலாறுகளும் ஒருசேர ஆய்வுக்குட்படுத்தி இலங்கையில் இனங்களுக்கிடையிலான முரண்பாடுகளை தோற்றுவிக்கும் சந்தர்ப்பங்களை இல்லாது செய்யலாம் என்பது திண்ணம்.
எனினும் இது நடைமுறைச் சாத்தியமற்றது.சிங்கள மக்களின் வாழிடமொன்றில் பிள்ளையார் வழிபாட்டுக்குரிய கடவுளாக இருக்கும் போது அதே ஆலயத்தில் புத்தர் சிலை வெளியேயும் அருகில் உள்ள அரச மரத்தின் கிளைகளின் உள்ளும் வைக்கப்பட்டிருப்பதனை அவதானிக்க முடிகின்றது.
இந்த நிலையில் நீராவியடி பிள்ளையார் கோவிலில் பிள்ளையார் புறக்கணிக்கப்பட்டு பிள்ளையார் வழிபாட்டினை மேற்கொள்ள வரும் சைவ மக்களுக்கு இடையூறுகளை ஏற்படுத்தி வந்திருந்தமையானது வலுவான சந்தேகத்தினை ஏற்படுத்துகின்றது என்பதும் இங்கே நோக்கத்தக்கது.
சிங்கள மக்களுக்கு ஊக்குவிப்புக்கள் வழங்கப்பட்டு ஒரு சிலரால் தங்கள் சுயலாபங்களுக்காக நீராவியடிப் பிள்ளையார் ஆலயத்தில் பிள்ளையார் வழிபாட்டுக்கு இடையூறுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளனவா என்ற சந்தேகமும் இல்லாமல் இல்லை.
தமிழ் அரசியல்வாதிகள் சிங்கள மக்களிடையேயும் தங்கள் அரசியல் செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும் என்பது இதன் மூலம் முன்வைக்கக்கூடிய முன்மொழிவாகும்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |