இந்திய அரசால் வழங்கப்பட்ட நிவாரணம்: கிராம அலுவலகத்திற்குள் பழுதடைந்த நிலையில்!
இலங்கையில் பொருளாதாரத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழக அரசினால் வழங்கப்பட்ட நிவாரணபொதிகள் சில முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று பிரதேசத்திற்கு உட்பட்ட நீராவிப்பிட்டி கிழக்கு கிராம அலுவலகரின் அலுவலகத்திற்குள் பழுதடைந்த நிலையில் காணப்படுவதாக மக்கள் தெரிவித்துள்ளனர்.
நிவாரணப்பொருட்கள்
இந்தியாவின் தமிழக அரசினால் இலங்கைக்கு நன்கொடையாக வழங்கப்பட்ட 02 பில்லியன் ரூபாவுக்கும் அதிக பெறுமதியுடைய அரிசி, பால் மா மற்றும் மருந்துப் பொருட்கள் அடங்கிய நிவாரணப்பொருட்கள் கடந்த மே மாதம் நாட்டை வந்தடைந்து வறுமைக்குட்பட்ட மக்களுக்கு மாவட்டங்கள் தோறும் வழங்கிவைக்கப்பட்டுள்ளன.
முல்லைத்தீவு மாவட்டத்திலும் மக்களுக்கு வழங்கப்பட்ட போதும் 50 கிலோ அரிசி, 7 கிலோக்கிராம் பால்மா பைக்கட்டுக்கள் இதுவரை மக்களுக்கு வழங்காமல் கிராம சேவலகர் அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ளதால் அவை பழுதடைந்த நிலையில் காணப்படுவதாக கிராம மக்கள் தெரிவித்துள்ளார்கள்.
நாட்டில் மக்கள் பொருளாதார நெருக்கடிக்கு முகம் கொடுத்துவரும் நிலையில் ஒரு கிலோ அரிசியினைகூட பெற்றுக்கொள்ளமுடியாத நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளார்கள்.
இந்நிலையில் இவ்வாறு மக்களுக்கு வழங்கப்படாமல் வைக்கப்பட்ட அரிசி பால்மா தொடர்பில் கிராம மக்களால் ஊடகவியலாளர் அழைக்கப்பட்டு அடையாளாப்படுத்தப்பட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பில் ஊடகவியலாளரினால் மாவட்ட அரசாங்க அதிபர் க.விமலநாதன் அவர்களின் கவனத்திற்கு நேரடியாக கொண்டுசெல்லப்பட்டுள்ளது.
ஒருசில அரச உத்தியோகத்தர்களின் இவ்வாறான செயற்பாட்டினால் மக்களுக்கு வழங்கப்படும் நிவாரணபொருட்கள் சரியாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு கிடைக்காமை தொடர்பில் மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.