அரசியல் கைதிகளை விடுதலை செய்யுமாறு அருட்தந்தை மா.சத்திவேல் கோரிக்கை
மிக நீண்ட காலமாக சிறையில் வாடும் அரசியல் கைதிகளை அரசியல் தீர்மானம் எடுத்து விடுதலை செய்து உங்கள் நல்லெண்ண அடையாளத்தை வெளிப்படுத்துங்கள் என சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும், அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளருமான அருட்தந்தை மா.சத்திவேல் கோரிக்கை விடுத்துள்ளார்.
இன்று (25.09.2024) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அரசியல் எதிர்ப்பு நடவடிக்கைகள்
மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “இலங்கையின் கடந்த கால அரசியல், பொருளாதார, அபிவிருத்தி, சமூக நல பொது சேவைகள் அது தொடர்பான கொள்கைகள், கட்டமைப்புகள் என்பவற்றோடு அரசியல் கலாச்சாரத்தையும் அரசியல் அரச இயந்திரத்தையும் "சுத்த கரண்ன ஓனே" (தூய்மைப்படுத்த வேண்டும்" எனும் மக்கள் விடுதலை முன்னணி தலைவரும் தேசிய மக்கள் சக்தியின் தலைவருமான அநுர குமார குரலைக் கேட்டு பெருந்தொகையான வாக்குகளால் மக்கள் அவரை நாட்டில் தலைவராக்கி கௌரவப்படுத்தியுள்ளனர்.
நாட்டின் அனைத்து மக்களின் ஜனாதிபதியான அவரை வாழ்த்துவதோடு; கடந்த 75 வருட காலமாக அடக்கி ஒடுக்கப்பட்டு பல இன கலவரங்களுக்கும், இன அழிப்பிற்கும், இனப்படுகொலைக்கும் உள்ளாகி தொடர்ந்தும் இன அழிப்பினை அனுபவித்துக் கொண்டிருக்கிற தமிழர்களாகிய நாங்களும் கூறுகின்றோம் "தூய்மைப்படுத்த வேண்டும்" அதனையும் செவிமடுத்தால் ஒரே நாட்டில் இரு தேச மக்கள் அனைத்து வகையிலும் வளர்ச்சிக்கண்டு ஒரே மக்கள் சக்தியாக எம்மை அடிமைப்படுத்த நினைக்கும் வல்லரசுகளுக்கும் இணைந்தே முகம் கொடுக்க முடியும் என்பதையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.
வரலாற்றில் மக்கள் விடுதலை முன்னணி வடகிழக்கு தமிழர்களுக்கு எதிராகவும், மலையகத் தமிழர்களுக்கு எதிராகவும் மேற்கொண்ட அரசியல் எதிர்ப்பு நடவடிக்கைகள் என்ன என்பதை நீங்கள் அறிவீர்கள்.
யுத்த கொடூரத்திற்கும் அதன் விளைவுகளுக்கும் மட்டுமல்ல இன்று முழு நாடாக மக்கள் அனுபவிக்கும் பொருளாதார துன்பங்களுக்கும் உங்கள் அமைப்பும் காரணமாகும்.
தமிழர்களின் பங்களிப்பு
அதனால் உங்கள் மீதுள்ள நம்பிக்கையீனத்திற்கும் காரணமானவைகளை தூய்மைப்படுத்தி எமது நம்பிக்கைக்கும் பாத்திரமாகுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
புதிய இலங்கைக்கான மனநிலையில் மக்கள் உங்களை ஜனாதிபதியாக தெரிந்து இருக்கும் சூழ்நிலையில் நாடு இன்னுமொரு தேர்தலை எதிர்நோக்கி இருக்கின்றது.
இத்தேர்தலில் தமிழர்களின் பங்களிப்பு உங்களோடு இருப்பதை நாம் எதிர்பார்க்கிறோம்.
இக்காலகட்டத்தில் நாம் விரும்பும் விடயங்களை உங்கள் கவனத்திற்கு கொண்டு எமது பார்வையில் சுத்தமாக்கப்பட வேண்டியவைகளை சுத்தமாக்குவதற்கான செயற்பாட்டு திட்டங்களை நாடாளுமன்ற தேர்தல் விஞ்ஞாபனத்தில் நீங்கள் சார்ந்த அமைப்பு மற்றும் கட்சி முன்னெடுப்பதற்கான ஆலோசனைகளை வழங்கி நாட்டை நேர்த்திசையில் கொண்டு செல்ல திடசங்கற்பம் கொள்ளுமாறு கேட்கின்றோம்” என்றும் அவர் குறிப்பிட்டள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |