ஏறாவூர் 02 கிராம சேவகர் பிரிவு விடுவிப்பு
கோவிட் வைரஸ் தொற்று பரவல் காரணமாக கடந்த 6ஆம் திகதி தொடக்கம் முடக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டிருந்த ஏறாவூர் நகரப் பிரதேச செயலகப்பிரிவிலுள்ள ஏறாவூர் 02 கிராம சேவகர் பிரிவு இன்று விடுக்கப்பட்டுள்ளது.
தமது பிரதேசம் இரு வாரங்களையும் கடந்து முடக்கப்பட்டிருப்பதாகப் பிரதேச வாசிகள் அதிருப்தி வெளியிட்டதைத் தொடர்ந்து ஏறாவூர் நகர சபைத் தலைவர் எம்.எஸ். நழீம், இராணுவ உயரதிகாரிகள், பொலிஸ் அதிகாரிகள் சுகாதாரத்துறை அதிகாரிகள் ஆகியோரின் கவனத்திற்கு இந்த விடயத்தைக் கொண்டு செல்லப்பட்டு முடக்கப்பட்ட கிராம அலுவலர் பிரிவு விடுக்கப்பட்டுள்ளது.
முடக்கப்பட்ட பகுதி மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாகப் பாதிக்கப்பட்டிருந்ததாகவும், தற்போது மக்கள் நிம்மதிப் பெருமூச்சு விடுவதாகவும் தெரிவித்த நகர சபைத் தலைவர் எம்.எஸ். நழீம், முடக்கப்பட்டிருந்த பிரதேசத்தில் ஏறாவூர் நகர சபையினால் நகரத் தூய்மையாக்கல் பணிகள் தற்போது தங்குதடையின்றி முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
ஏறாவூர் காட்டுப்பள்ளி வீதி மக்காமடி வீதி ஓடாவியர் வீதிக்கு இடைப்பட்ட பிரதேசத்தில் சுமார் 600 குடும்பங்களைச் சேர்ந்த 3000 பேரின் நடமாட்டமும் இயல்பு வாழ்க்கையும் கோவிட் வைரஸ் தொற்றுப் பரவல் காரணமாக முடக்கப்பட்டிருந்தது.
அந்த பகுதியில் கடைசியாகக் கடந்த 17, 18 ஆகிய இரு தினங்களில் மேற்கொள்ளப்பட்ட
அன்டிஜன் பரிசோதனையில் கோவிட் வைரஸ் தொற்றுக்குள்ளான 56 பேர் அடையாளம்
காணப்பட்டிருந்ததோடு, பிரதேசத்தில் 3 கோவிட் வைரஸ் மரணங்கள்
சம்பவித்திருந்ததாகவும் ஏறாவூர் நகரப் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி பாத்திமா
ஷாபிறா வஸீம் தெரிவித்துள்ளார்.




