அவுஸ்திரேலிய அரசால் 12 ஆண்டுகளாக தடுத்து வைக்கப்பட்டிருந்த தமிழ் அகதி விடுவிப்பு
அவுஸ்திரேலியாவில் படகு வழியாக தஞ்சமடைந்த தமிழ் அகதியான சிவகுரு “ராஜன்” நவநீதராசா 12 ஆண்டுகளாக தடுப்பு மையங்களில் வைக்கப்பட்டிருந்த நிலையில், சமூகத்தடுப்பிற்குள் விடுவிக்கப்பட்டுள்ளார்.
சமூகத்தடுப்பு என்பது அவுஸ்திரேலியா அரசாங்கத்தால் தீர்மானிக்கப்பட்ட குறிப்பிட்ட இடத்தில் ஒருவரை வாழ அனுமதிப்பதாகும். தடுப்பு மையங்களுடன் ஒப்பிடுகையில் சமூகத் தடுப்பு முறை குறைந்தபட்ச அளவிலான சுதந்திரத்தை குறிப்பிட்ட அகதிக்கு வழங்குகிறது.
இந்த விடுவிப்பு 12 ஆண்டுகளாக இருளில் இருந்த ஒருவருக்கு நம்பிக்கையின் அடையாளம் என ராஜனின் நண்பரான அஜந்தன் கூறியிருக்கிறார். “ராஜன் தடுப்பிலிருந்த போதே அவரது தாய் இறந்துவிட்டதாக அஜந்தன் தெரிவித்துள்ளார்.
ராஜனின் விடுதலைக்காக அவுஸ்திரேலியாவில் நீண்ட பல போராட்டங்கள் நடந்துள்ளன. இலங்கையை பிறப்பிடமாகக் கொண்ட தமிழ் அகதி ராஜன், 2009ம் ஆண்டு அவுஸ்திரேலியாவில் படகு வழியாக தஞ்சமடைந்தவர்.
இலங்கையிலிருந்து 2008ம் ஆண்டு வெளியேறியவர் மலேசியாவில் ஓர் ஆண்டுக்கு மேலாக அகதி அந்தஸ்து இன்றி வசித்து வந்திருக்கிறார். பின்னர், அவுஸ்திரேலியாவில் 2009ம் தஞ்சமடைந்த ராஜனை அவுஸ்திரேலியா அரசு கிறிஸ்துமஸ் தீவு முகாமில் தடுத்து வைத்தது.பின்னர் வில்லாவுட் தடுப்பு முகாமிற்கு மாற்றப்பட்டார்.
அதன் பிறகு, கடந்த 2016 முதல் மெல்பேர்ன் குடிவரவு இடைமாற்று மையத்தில் அவர் வைக்கப்பட்டுள்ளார்.
கடந்த 2019ம் ஆண்டு இரத்துபுற்றுநோயால் பாதிக்கப்பட்ட அவருக்கு அதற்கான சிகிச்சை வழங்கப்பட்டுள்ளது.
2010ம் ஆண்டு நவநீதராசாவுக்கு அகதி அந்தஸ்து கிடைத்த நிலையில், ASIO எனப்படும் அவுஸ்திரேலியா பாதுகாப்பு புலனாய்வு அமைப்பு அவரை பாதுகாப்புக்கு அச்சுறுத்தலான நபராக அடையாளப்படுத்தி இருக்கிறது. அவர் முன்பு, தனி ஈழம் கோரி இலங்கையில் போரிட்ட விடுதலைப்புலிகள் அமைப்பில் செயற்பட்டதற்காக அவரை அச்சுறுத்தலான நபராக அடையாளப்படுத்தியதாகக் கூறப்படுகின்றது.
ஆனால், அம்முடிவினை அவுஸ்திரேலியா பாதுகாப்பு புலனாய்வு அமைப்பு 2016ல் ரத்து செய்த போதிலும் அவருக்கான பாதுகாப்பு விசா வழங்கப்படவில்லை. இந்த சூழலில், சமூகத்திற்குள் விடுவிக்கப்பட்டுள்ள ராஜனுக்கு அவுஸ்திரேலியாவில் நிரந்தர பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் என்பதே இவரது நல விரும்பிகளின் கருத்தாக உள்ளது.
ராஜனை சமூகத்திற்குள் விடுவித்துள்ள அவுஸ்திரேலியா குடிவரவுத்துறை அமைச்சர் அலெக்ஸ் ஹாக் முடிவை வரவேற்றுள்ள தமிழ் அகதி கவுன்சிலின் பேச்சாளர் அரண் மயில்வாகனம், ராஜனுக்கு நிரந்தர பாதுகாப்பைக் கோரியிருக்கிறார். “அவர் விடுவிக்கப்பட்டதன் பின்னர் பாதுகாப்பாக உணர வேண்டும்.
ஆனால் ராஜனின்
எதிர்காலம் தெளிவற்றதாக உள்ளது. நிரந்தர பாதுகாப்பு இல்லாததால் 'தமிழ் மக்கள்
ஆபத்தை எதிர்கொண்டுள்ள இலங்கைக்கு நாடு கடத்தல்' உள்ளிட்ட பல சவால்களை
எதிர்கொள்ள வேண்டியிருக்கும்,” என மயில்வாகனம் தெரிவித்துள்ளார்.