சர்வதேச காணாமல் போனோர் தினத்திலாவது நீதியை வேண்டி நிற்கும் உறவுகள்
வடக்கு, கிழக்கில் அதிகமான தமிழ் பேசும் உறவுகளை இழந்த நிலையில் தற்போது வரை கண்ணீர் வடிக்கும் நிலை காணப்படுகிறது.
யுத்த காலத்தில் பல காணாமல் போன உறவுகளை தேடி தேடி அலைந்து வருகின்றனர். இந்த நிலையில் சர்வதேச காணாமல் போனோர் தினம் இன்று(30) அனுஷ்டிக்கப்பட்டுள்ள நிலையில் வடகிழக்கில் பாரிய எழுச்சி பேரணி இடம்பெற்றுள்ளது.
தமிழருக்கான நீதி வேண்டிய தங்கள் உறவுகளுக்கான நீதியை வேண்டியும் இந்தப் போராட்டம் இடம்பெற்றுள்ளது. காணாமல் போன உறவுகளில் தங்களுடைய உறவுகளை தேடி பல போராட்டங்களை நடாத்திய தாய்மார்களில் 300க்கும் மேற்பட்டோர்கள் இறந்துள்ளனர்.
முறைப்பாடு
இந்த நிலையில் இது குறித்து தம்பலகாமம் கோயிலடியை சேர்ந்த தாயான ந.அனுஷியா தெரிவிக்கையில் " 2008இல் எனது கணவர் வவுனியாவில் வைத்து காணாமல் போயுள்ளார். இதுவரைக்கும் அவர் தொடர்பான தகவல்கள் தெரியவில்லை.
வெளியில் சென்றவரே காணாமல் போயுள்ள நிலையில் தற்போது வரை எவ்வித பதில்களும் கிடைக்கவில்லை. இது தொடர்பில் சர்வதேச செஞ்சிலுவை சங்கம்,இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவிடமும் முறைப்பாடு செய்தோம்.
பதில் எதுவும் இன்றி குடும்ப பொருளாதார கஷ்டத்துடன் காலத்தை கடத்த வேண்டியுள்ளது எனது கணவர் தொடர்பான உண்மை தன்மையை அரசாங்கம் வெளிப்படுத்த வேண்டும் உண்மை நிலவரம் தெரிய வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.
தற்போதைய அநுர அரசாங்கம் முதல் ஆட்சிக்கு மாறி மாறி வரும் அரசாங்கம் காணாமல் போன உறவுகளை ஏமாற்றியுள்ளது. காணாமல் போனோருக்கான அலுவலகம் மற்றும் பல விசாரணை பதிவுகளை முன்னெடுத்த போதிலும் நிரந்தர தீர்வு கிடைக்காமை மக்களை உளரீதியான பாதிப்புக்களுக்கு உள்ளாக்குகிறது.
சர்வதேச நீதிப்பொறி முறை ஊடான விசாரணை தான் தேவை என்றும் உள்ளக விசாரனை பொறி முறையில் நம்பிக்கை இல்லை என்றும் தெரிவிக்கின்றனர்.
இவ்வாறான நிலையில் வடக்கில் செம்மணி மனித புதை குழி ,கிழக்கில் சம்பூர் பகுதி புதை குழி தொடர்பிலும் பல எதிர்பார்க்க முடியாத நிலவரம் தோன்றியுள்ளது. இங்குள்ள மனித எலும்புகள் தங்கள் உறவுகளாக கூட இருக்கலாம் எனவும் சந்தேகிக்கின்றனர்.
போராட்டம்
இது குறித்து வலிந்து கடத்தப்பட்டு காணாமல் போன உறவுகளின் திருகோணமலை மாவட்ட சங்க தலைவி செபஸ்டியன் தேவி தெரிவிக்கையில் "17வருடங்களாக எமது உறவுகளுக்காக போராடி வருகிறோம். போராடி போராடி உயிரிழப்புக்களை எம் தாய்மார்கள் சந்தித்தது மாத்திரமே மிஞ்சியுள்ளது.
சர்வதேச பொறி முறை ஊடாக விசாரணை வேண்டும். உள்நாட்டு பொறி முறை ஊடான விசாரணையில் நம்பிக்கை இல்லை. வடகிழக்கில் உள்ள எட்டு மாவட்டங்களில் தமிழ் உறவுகள் இதன் மூலமாக பாதிக்கப்பட்டுள்ளோம். 22மாவட்டங்களில் மனித புதை குழி உள்ள நிலையில் அங்கு மனித எச்சங்களும் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
இது எமது உறவுகளுடையதாக கூட இருக்கலாம்.இவ்வாறான புதை குழிகள் அனைத்தும் சர்வதேச நிபுணர்களின் உதவியுடன் தோண்டப்பட்டு ஆராய்ச்சிக்கு உட்படுத்தி உண்மை நிலை நாட்டப்பட்டு சர்வதேச நீதி கிடைக்கவேண்டும் என எதிர்பார்க்கிறோம்.
இந்த சர்வதேச காணாமல் போனோர் தினத்திலாவது தமிழர்களின் இன அழிப்புக்கு நீதி கிட்டுமா என ஏங்குகிறோம். அநுர அரசாங்கம் உள்நாட்டு பொறி முறை விசாரணையை விடுத்து சர்வதேச பொறி முறை ஊடான விசாரணை மூலமான நீதியை பெற்றுத் தரவேண்டும்.
முன்னாள் ஜனாதிபதியை கைது செய்து நான்கு நாட்களில் என்ன ஆனது. இவர்கள் எல்லோரும் ஒரே மட்டையில் ஊறிய குட்டைதான். எந்தவிதமான தீர்வும் இல்லை. எல்லாமே பொய்யை தான் அரசாங்கம் கூறுகிறது. எனவே சர்வதேச நீதி கிடைக்கும் என நம்புகிறோம் எனத் தெரிவித்துள்ளார்.
தமிழர்களின் இனவழிப்புக்கு காரணமானவர்கள் கண்டறியப்பட வேண்டும் என்ற வடகிழக்கு தமிழ் தாயக மக்களின் கோரிக்கைகளாக காணப்படுகிறது. எது எப்படியாக இருந்தாலும் காணாமல் போன உறவுகளுக்காக எந்த அரசாங்கமும் செவிசாய்க்கவில்லை.
அரசாங்கம் மீதான நம்பிக்கை
1990ஆம் ஆண்டு எனது கணவரான ப.மதியழகன் காணாமல் போயுள்ளார்.அப்போது 35 வயது இருக்கும். தம்பலகாமத்தில் வைத்து கடைக்கு சென்று வருகிறேன் என போனவரை காணவில்லை. இராணுவத்தினர் கடத்தியுள்ளனர். இது தொடர்பில் பல முறைப்பாடுகளை செய்துள்ளேன்.
மனித உரிமைகள் ஆணைக்குழு,செஞ்சிலுவை சங்கம் என பல வாக்கு மூலங்களை வழங்கிய போதிலும் பதில் கிடைக்கவில்லை இதனால் பொலிஸ் அறிக்கை மற்றும் மரண சான்றிதழை பெற்றுவிட்டேன் என தம்பலகாமம் கூட்டாம்புளியை சேர்ந்த ம.ரங்கநாயகி தெரிவித்திருந்தார்.
இவ்வாறான பலர் தங்கள் கணவன்மார்கள்,பிள்ளைகள் உறவுகளை இழந்தவர்கள் தொடர்ந்தும் கண்ணீர் வடித்த நிலையில் தொடர் போராட்டங்களை நடாத்தி வருகின்றனர்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழு வரைக்கும் காணாமல் போனோர் விவகாரம் கொண்டு செல்லப்பட்டுள்ளது. மனித உரிமைகள் ஆணையாளர் வோல்கர் டர்க் அண்மையில் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டு வடகிழக்கு காணாமல் போன உறவுகள் சிவில் சமூக பிரதிநிதிகளை சந்தித்து குறித்த விவகாரம் தொடர்பில் கேட்டறிந்து கொண்டதுடன் பாதிக்கப்பட்ட தரப்புக்கள் ஆணையாளரிடம் மனுவையும் கையளித்தனர்.
இலங்கை அரசாங்கம் மீதான நம்பிக்கையை இச் சமூகம் இழந்த நிலையில் சர்வதேச விசாரணையை கோருகிறது. அநுர குமார அரசாங்கமும் ஒரே நிலைப்பாட்டில் தான் உள்ளது. கடந்த அரசாங்கம் செய்ததை போன்றே செயற்படுகிறது.
நீதி
மாற்றம் ஒன்றை கொண்டு வர நினைத்தாலும் தமிழர்களின் இனவழிப்புக்கான நியாயம் கிடைக்கவில்லை என்பதை பல அறிக்கைகள் சுட்டிக் காட்டுகின்றன.
இது குறித்து திருகோணமலையை சேர்ந்த சிவில் சமூக மனித உரிமைகள் செயற்பாட்டாளர் கோகிலவதனி கண்ணன் தெரிவிக்கையில் "இலங்கையில் நடைபெற்ற யுத்தங்களை காரணம் கூறி எங்கள் உறவுகளை கடத்தி யுத்தம் முடிந்து 17 வருடங்கள் கடந்த நிலையில் நீதி கிடைக்காமை தேடி வருகிறோம்.
இலங்கை நாடாளுமன்றம் ஊடாக காணாமல் போனோருக்கான அலுவலகம் திறக்கப்பட்டும் எவ்வித உண்மையும் இல்லை. இதனால் சர்வதேச நீதியை கூட கிடைக்குமா என நம்பிக்கை இல்லை. நீதிக்காகவும் உண்மையை கண்டறியவும் தொடர்ந்தும் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
எனவே தான் சர்வதேச காணாமல் போனோர் தினத்திலாவது நீதி கிடைக்குமா என எம் உறவுகள் ஏங்குகின்றனர்.
இலங்கை அரசாங்கத்திடமும் சர்வதேசத்திடமும் இவ் உறவுகளின் ஒரே கோரிக்கை புதிய பொறிமுறை ஊடான விசாரணையை வலியுறுத்தி நீதியை பெற்றுத் தர வேண்டும் என்பதே ஆகும்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
பொறுப்பு துறப்பு!
இக்கட்டுரையானது பொது எழுத்தாளர் H. A. Roshan அவரால் எழுதப்பட்டு, 30 August, 2025 அன்று தமிழ்வின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டது. இக்கட்டுரைக்கும் தமிழ்வின் தளத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை.



