மகளிர் தினத்தில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள்
முல்லைத்தீவு மாவட்ட செயலகத்திற்கு முன்பாக வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.
குறித்த போராட்டமானது மகளிர் தினமான இன்று (08.03.2024) காலை 10 மணியளவில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
ஏழு வருட பூர்த்தி
மகளிர் தினத்தை முன்னிட்டும் முல்லைத்தீவு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் போராட்டம் ஏழு வருட பூர்த்திக்கும் ஆதரவு தெரிவித்தும் இந்த போராட்டத்தை மேற்கொண்டு வருவதாக காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும், காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் கவனயீர்ப்பு போராட்டத்திற்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட வடக்கு, கிழக்கு எட்டு மாவட்டங்களை சேர்ந்த உறவினர்கள், தென்பகுதியில் இருந்து வருகை தந்த மதகுரு செறாட் ஜெயவர்த்தன உள்ளிட்ட குழுவினர் ஆதரவு வழங்கியிருந்துள்ளனர்.
இந்த போராட்டத்தில் கலந்து கொண்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கங்களின் தலைவிகள் ஜனாதிபதி தேர்தல் தொடர்பிலும் கருத்து வெளியிட்டுள்ளார்கள்.
இலங்கையில் யார் ஜனாதிபதி வந்தாலும் காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதிவேண்டிய
போராட்டம் தொடரும் என்றும் இதுவரை நான்கு ஜனாதிபதிகள் இலங்கையினை ஆட்சி செய்த
காலம் தொடக்கம் நீதிக்கான போராட்டத்தில் தாம் ஈடுபட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.
குறித்த போராட்டத்தின் போது இராணுவத்தை நம்பி கையளித்த பிள்ளைகள் எப்படி காணாமலாக்கப்பட்டார்கள், நீதி தேவதை ஏன் கண்மூடி விட்டாய்?, 55ஆவது தொடரிலாவது எமக்கு நீதி கிடைக்குமா?, கால அவகாசம் வேண்டாம் முறையான நீதி விசாரணையே வேண்டும், பெண்கள் நாட்டின் கண்களா ? இல்லை கண்ணீருக்காக கண்களா? போன்ற பல்வேறு வாசகங்களையுடைய பதாதைகளை தாங்கியவாறு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





