கோட்டா கோ கம போராட்டக்காரர்களை அகற்றுவதற்கு எதிரான மனு நிராகரிப்பு
காலி முகத்திடல் கோட்டா கோ கம போராட்டக்காரர்களை அகற்றுவதற்கு எதிரான மனுவொன்றை உச்சநீதிமன்றம் இன்று நிராகரித்துள்ளது.
கோட்டா கோ கம போராட்டக்காரர்களை அகற்றும் நோக்கில் அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாகவும், அதற்கு தடையுத்தரவு பிறப்பிக்குமாறும் பொறியியலாளர் ஹுஸ்லி அமீன் என்பவர் இந்த மனுவை தாக்கல் செய்திருந்தார்.
சட்டமா அதிபர், பொலிஸ் மா அதிபர், முன்னாள் இராணுவத்தளபதி சவேந்திர சில்வா, ஜனாதிபதி செயலாளர் காமினி செனரத், பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கமல் குணரத்ன ஆகியோர் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டிருந்தனர்.
மனு நிராகரிப்பு
இதன்போது சட்டமா அதிபர் சார்பில் நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்த அரசாங்க சட்டத்தரணி ஷமிந்திர விக்கிரம, போராட்டம் தற்போதைக்கு ஐம்பது நாட்களை கடந்து விட்டதாகவும், அமைதியான போராட்டங்களை கலைக்க அரசாங்கம் ஒருபோதும் முயற்சிக்காது என்றும் உறுதியளித்தார்.
அத்துடன் போராட்டக்காரர்கள் டெண்ட் அடித்து அப்பிரதேசத்தை வசிப்பிடமாக மாற்றிக் கொண்டுள்ளதால் பொதுமக்கள் மற்றும் ஜனாதிபதி அலுவலக ஊழியர்கள் பெரும் அசௌகரியங்களுக்கு உள்ளாகி வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இதனையடுத்து மனுதாரரின் மனுவை விசாரணைக்கு எடுக்காமல் நிராகரிப்பதாக நீதியரசர்களான தெஹிதெனிய மற்றும் ஏ.எச்.எம். நவாஸ் ஆகியோர் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.