வசந்த கரன்னாகொடவிற்கு எதிரான மேன்முறையீடு நிராகரிப்பு
இலங்கை கடற்படையின் முன்னாள் தளபதி அட்மிரல் ஒப் த பிலீட் வசந்த கரன்னாகொடவிற்கு எதிரான மேன்முறையீட்டு மனுவை நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
கரன்னாகொடவிற்கு எதிரான குற்றப்பத்திரிகையை சட்ட மா அதிபர் வாபஸ் பெற்றுக் கொண்டமையை எதிர்த்து மேன்முறையீட்டு நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட மனு இவ்வாறு நிராகரிக்கப்பட்டுள்ளது.
11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் போகச் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கில் கரன்னாகொடவிற்கு எதிராகவும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
எனினும் தற்போதைய சட்ட மா அதிபர் குறித்த குற்றப்பத்திரிகையை வாபஸ் பெற்றுக்கொள்வதாக நீதிமன்றிற்கு அறிவித்திருந்தார்.
இந்த அறிவிப்பினைத் தொடர்ந்து காணாமல்போன இளைஞர்களின் உறவினர்கள் மேன்முறையீட்டு நீதிமன்றில் வசந்த கரன்னாகொடவிற்கு எதிராக மனுவொன்றை தாக்கல் செய்தனர்.
இந்த மனுவை பரிசீலனை செய்த மேன்முறையீட்டு நீதிமன்றம், மனுவை நிராகரித்துள்ளது.
வழக்குத் தொடர்வதற்கும், அதனை வாபஸ் பெற்றுக்கொள்வதற்கும் சட்ட மா அதிபருக்கு அதிகாரம் உண்டு என மேன்முறையீட்டு நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது.
