அவுஸ்திரேலியாவில் அகதிகள் தொடர்பிலான நேர்காணலை அறிவித்துள்ள அரசு
அவுஸ்திரேலியாவில் தஞ்சம் கோரிய அகதிகள், தங்களது தஞ்சக்கோரிக்கை விண்ணப்பங்கள் பரிசீலணைக்காக பல ஆண்டுகளாக காத்திருந்த நிலையில் திடீரென இரண்டு வாரங்களில் நேர்காணல் எனும் அறிவிப்பு ‘போதுமான காலமல்ல’ என அகதிகளின் வழக்கறிஞர்கள் கவலைத் தெரிவித்துள்ளனர்.
அவுஸ்திரேலியாவில் தஞ்சக்கோரிக்கை பரிசீலணை வேகப்படுத்தப்பட்டுள்ளதனால், அந்நாட்டில் பல ஆண்டுகளாக வசித்து வரும் சுமார் 1000த்திற்கும் மேற்பட்ட அகதிகள் அச்சத்தில் உள்ளனர்.
கடந்த 2014ம் ஆண்டுக்கு முன்னதாக அவுஸ்திரேலியாவில் படகு வழியாக தஞ்சமடைந்த பல அகதிகள் அவுஸ்திரேலியா உள்துறையுடனான இந்த நேர்காணல்களுக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
அவுஸ்திரேலியாவில் பாதுகாப்புக் கோரியுள்ள இந்த அகதிகள் ‘அவுஸ்திரேலியாவில் வாழ அனுமதிக்கப்படுவார்களா? இல்லையா?’ என்பதை தீர்மானிக்கப் போகும் முக்கியமான நேர்காணல் இதுவாகும்.
இந்த நேர்காணல்களை எதிர்கொள்ளப்போகும் அகதிகள் பலர் மொழிப் பிரச்சினை, பொருளாதார பிரச்சினைகளை சந்திப்பார்கள் என்றும் நேர்காணலுக்கு தயாராவதற்கு யாரிடம் உதவிக் கேட்பது எனத் தெரியாமல் தவிப்பார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது.
இரண்டு குழந்தைகளின் தாயான ஓர் அகதி எட்டு ஆண்டுகளாக தனது தஞ்சக்கோரிக்கை விண்ணப்பம் பரிசீலிக்கப்படுவதற்காக தான் காத்திருப்பதாக தஞ்சக்கோரிக்கையாளர் வள மையத்திடம் தெரிவித்திருக்கிறார்.
“தற்போது எனக்கு கடிதம் அனுப்பினார்கள், அதுவும் ஆங்கிலத்தில் மட்டும் அனுப்பியிருக்கிறார்கள். இன்னும் சில தினங்களில் எனக்கு நேர்காணல் என எனக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது,” எனக் குறிப்பிட்டுள்ளார்.
எனக்கு வழக்கறிஞர் இல்லை, வழக்கறிஞருக்கு செலுத்த என்னிடம் பணமில்லை. நேர்காணலுக்கு தயாராவதற்காக எனக்கு உதவித் தேவைப்படுகிறது. கடந்த எட்டு ஆண்டுகளில் ஏற்பட்ட மன அழுத்தத்தினால் என்னால் எதுவும் யோசிக்கக்கூட முடியவில்லை,” என அவர் கூறியிருக்கிறார்.
எதிர்வரும் ஜூன் 30ம் தேதிக்குள் 1200 தஞ்சக்கோரிக்கையாளர்களுக்கான முதல் கட்ட நேர்காணல்களை முடிக்க அவுஸ்திரேலியா உள்துறை திட்டமிட்டுள்ளதாக சமூக சட்ட மையங்கள் எச்சரிக்கை விடுத்துள்ளன.
இந்த நிலையில், அவுஸ்திரேலியா மாநிலங்களான நியூ சவுத் வேல்ஸ் மற்றும் விக்டோரியாவில் உள்ள சட்ட மையங்களில் பெருமளவிலான அகதிகள் உதவிக்கோரியிருப்பதாக Refugee Advice & Casework Service (RACS) அமைப்பு தெரிவித்துள்ளது.
திடீரென வேகப்படுத்தப்பட்டுள்ள தஞ்சக்கோரிக்கை பரிசீலணைக் காரணமாக வழக்கறிஞர்களின் தேவை அதிகரித்துள்ளதால் அகதிகளுக்கு சட்ட உதவிக்கிடைக்காமல் போகக்கூடும் என சட்ட உதவி மையங்கள் தெரிவித்துள்ளன.
சட்டவிரோத கடல் வருகையின் மூலம் வந்தவர்கள் 2017 அக்டோபர் 1ம் தேதிக்குள் தங்கள் தஞ்சக்கோரிக்கை விண்ணப்பங்களை சமர்பிக்க அறிவுறுத்தப்பட்டிருந்தது. அதன் பிறகு எப்போது வேண்டுமானாலும் கூடுதல் தகவல்களை சம்பந்தப்பட்ட விண்ணப்பத்தாரரிடம் கேட்கலாம்.
திட்டமிடப்பட்ட நேர்காணல் தொடர்பாக 14
நாட்களுக்குள் அறிவிக்க வேண்டும் என சட்டம் சொல்கிறது. அதனடிப்படையில்
குறைந்தபட்சம் 14 நாட்களுக்கு முன்னதாக உள்துறை சம்பந்தப்பட்ட
தஞ்சக்கோரிக்கையாளருக்கு நேர்காணல் திகதியை அறிவுறுத்தியுள்ளது என அவுஸ்திரேலியா உள்துறை தரப்பில் கூறப்பட்டுள்ளது.