அவுஸ்திரேலியாவில் 8 ஆண்டுகளுக்கு பிறகு அகதிகள் விடுவிப்பு
அவுஸ்திரேலியாவில் படகு வழியாக தஞ்சம் கோரிய 60க்கும் மேற்பட்ட அகதிகள் பல ஆண்டுகளாகத் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் சமீபத்தில் விடுவிக்கப்பட்டுள்ளதாக Action Coalition அமைப்பு தெரிவித்துள்ளது.
பிரிஸ்பேன், சிட்னி, டார்வின் உள்ளிட்ட அவுஸ்திரேலிய பகுதிகளில் அமைந்திருக்கும் தடுப்பு முகாம்களிலிருந்து இவர்கள் விடுவிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அகதிகள் சுமார் 8 ஆண்டுகள் தீவுப்பகுதிகளிலும் அவுஸ்திரேலியாவிலும் சிறை வைக்கப்பட்டிருந்த நிலையில், அவர்களுக்கு தற்காலிக விசா வழங்கப்பட்டுள்ளது.
அவுஸ்திரேலியாவில் படகு வழியாக தஞ்சமடைபவர்களை கையாள்வதில் கடுமையான எல்லைப்பாதுகாப்புக் கொள்கைகளை கடைப்பிடித்து வரும் அவுஸ்திரேலியா அரசு, இவ்வாறான பயணங்களை ஆட்கடத்தல் முயற்சி என அடையாளப்படுத்துகின்றது. அதனடிப்படையில் 2013ம் ஆண்டு காலக்கட்டத்தில் வந்த அகதிகளை/தஞ்சக்கோரிக்கையாளர்களை பப்பு நியூ கினியா மற்றும் நவுருத்தீவில் அவுஸ்திரேலியா அரசு சிறைப்படுத்தி வைத்திருந்தது.
அந்த அகதிகளே தற்போது தற்காலிக இறுதி புறப்பாடு விசா வழங்கப்பட்டு அவுஸ்திரேலிய சமூகத்திற்குள் அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர்.
இது தொடர்பாக பேசியுள்ள அவுஸ்திரேலிய உள்துறை அமைச்சர் பீட்டர் டட்டன், அகதிகளை தடுப்பில் வைப்பதை விட சமூகத்திற்குள் விடுவிப்பது அரசின் செலவுகளை குறைக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.