கடும் நிதி நெருக்கடி - நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு உணவில் கட்டுப்பாடு
நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் உணவில் கறிகள், இனிப்பு மற்றும் இறைச்சி மற்றும் மீன் ஆகியவற்றை குறைக்க இலங்கை நாடாளுமன்றம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இதுவரை எட்டுக் கறிகள் என்று மட்டுப்படுத்தப்பட்ட மதிய உணவிற்கு தற்போது நான்கைந்து கறிகள் மட்டுமே வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமும் இறைச்சி, மீன் வழங்கப்பட்டது
அந்த கறிகளில் அம்பரலங்காய், சேனைக்கிழங்கு, மரவள்ளிக்கிழங்கு, பருப்பு, ஈரப்பலா, பலா மூசு, மாங்காய் போன்ற காய்கறிகளும் இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏனைய நாட்களில் தினமும் இறைச்சி, மீன் வழங்கப்பட்டு வரும் நிலையில், தற்போது ஒரு வகை மட்டுமே வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மீன் வகைகளில் தேரா, பார்வ், தலபத், கொப்பரை போன்றவையும் நிறுத்தப்பட்டுள்ளன. அதற்கு பதிலாக லின்னா, சாலயா, மத்தி போன்ற மீன்களை வழங்கவுள்ளதாக நாடாளுமன்ற சிற்றுண்டிச்சாலை திணைக்களம் தெரிவித்துள்ளது.
முட்டை வழங்குவதில் சிக்கல்
வாரத்திற்கு இரண்டு முறை மட்டுமே கோழிக்கறி வழங்கப்படுவதுடன், முட்டை வழங்குவதும் சிக்கலாகியுள்ளது. உணவுப் பொருட்களின் விலை அதிகரிப்பு காரணமாக இந்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இனிப்பு உணவாக இரண்டு வகையான பழங்கள் மட்டுமே வழங்கப்படுகின்றது. நாடாளுமன்றத்தின் சிற்றுண்டிச்சாலைத் திணைக்களத்தின் மாதாந்தச் செலவு சுமார் பத்து மில்லியன் ரூபாவாகும்.
நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் உணவில் கறிகள் மற்றும் இனிப்புகள் குறைக்கப்பட்டதன் பின்னர், அவர்களின் உணவு உட்கொள்ளும் அளவும் குறைந்துள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.