நாட்டில் இரு பகுதிகளுக்கு சிவப்பு வெள்ள அபாய எச்சரிக்கை
மல்வத்து ஓயா மற்றும் கலா ஓயா ஆகிய நீர்த்தேக்கங்களை அண்டிய தாழ்நில பகுதிகளுக்கு சிவப்பு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நீர்ப்பாசன திணைக்களம் இந்த அவசர அறிவிப்பினை விடுத்துள்ளது.
மல்வத்து ஓயா
அந்தவகையில், இன்று மாலை 4.00 மணியிலிருந்து மல்வத்து ஓயாவின் மேல் மற்றும் நடு ஆற்றுப் பகுதிகளில் கணிசமான மழை பெய்துள்ளது. குறிப்பாக, நச்சத்துவ நீர்த்தேக்கம் தற்போது வினாடிக்கு 3700 கன அடி வீதத்தில் நிரம்பி வருவதாக கணிக்கப்பட்டுள்ளது.
அந்த நிலைமை மற்றும் மல்வத்து ஓயாவில் உள்ள நீர்நிலைகளின் ஆற்று நீர் மட்டங்களை பகுப்பாய்வு செய்வதன் மூலம், வெங்கலசெட்டிகுளம், மடு, முசலி மற்றும் நானாட்டான் பிரதேச செயலாளர் பிரிவுகளில் அமைந்துள்ள மல்வத்து ஓயா பள்ளத்தாக்கின் தாழ்வான பகுதிகளில் பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்புள்ளது என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.
இதன் விளைவாக, ஏற்கனவே வெள்ளத்தில் மூழ்கியுள்ள சாலைகள் மிகவும் பாதிக்கப்படக்கூடியதாகவும் கடப்பதற்கு ஆபத்தானதாகவும் மாறக்கூடும். அந்தப் பகுதிகள் வழியாகச் செல்லும் மக்கள் மற்றும் வாகன ஓட்டுநர்கள் இது தொடர்பாக அதிக கவனம் செலுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், இது தொடர்பாக அவதானமாகவும் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் பேரிடர் முகாமைத்துவ அதிகாரிகளுக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது.
கலா ஓயா
அதேவேளை, இன்று மாலை 5.00 மணி நிலவரப்படி, கலா ஓயாவின் மேல் மற்றும் நடு பகுதிகளில் கணிசமான மழை பெய்துள்ளது. அதன்படி, ராஜாங்கனை நீர்த்தேக்கம் இப்போது வினாடிக்கு 17000 கன அடி என்ற விகிதத்தில் நிரம்பி வருகிறது.
இந்நிலைமை மற்றும் கலா ஓயாவில் உள்ள நீர்நிலைகளின் ஆற்று நீர் மட்டங்களை பகுப்பாய்வு செய்வதன் மூலம், ராஜாங்கனை, நொச்சியாகம, வனாத்தவில்லு மற்றும் கருவலகஸ்வெவ பிரதேச செயலாளர் பிரிவுகளில் அமைந்துள்ள கலா ஓயா பள்ளத்தாக்கின் தாழ்வான பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்புள்ளது என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.
இதன் விளைவாக கலா ஓயாவின் வெள்ளப்பெருக்கு சமவெளிகள் வழியாக செல்லும் சாலைகள் நீரில் மூழ்கும் வாய்ப்பு அதிகம்.
எனவே, அந்தப் பகுதியில் வசிப்பவர்கள் மற்றும் அந்தப் பகுதிகள் வழியாகச் செல்லும் வாகன ஓட்டுநர்கள் இது தொடர்பாக அதிக கவனம் செலுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுவதுடன் இது தொடர்பாக போதுமான நடவடிக்கைகளை எடுக்குமாறு பேரிடர் முகாமைத்துவ அதிகாரிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |