கிளீன் சிறிலங்கா: அரசாங்கத்தை கவனம் செலுத்த கோரும் சமூக பற்றாளர்கள்
கிளீன் சிறிலங்காதொடர்பாக கடந்த வாரம் நான் எழுதிய கட்டுரையை வரவேற்று ஒரு நண்பர் கருத்து தெரிவித்திருந்தார்.
ஸ்ரீலங்காவை ஓரளவுக்காவது கிளீன் பண்ணக்கூடிய இடம் சுற்றுச்சூழல் விவகாரங்கள்தான் என்பதை ஏற்றுக் கொண்ட அவர் ஒரு விடயத்தை சுட்டிக்காட்டியிருந்தார்.
நீண்ட தூரப் போக்குவரத்தில் ஈடுபடும் வாகனங்களை சிரம பரிகாரத்துக்காக நிறுத்தும் இடங்களில் உள்ள சுகாதாரக் கேடுகளை அவர் சுட்டிக் காட்டினார்.
குறிப்பாக யாழ்ப்பாணத்திற்கும்(Jaffna) கொழும்புக்கும் இடையிலான போக்குவரத்து வழியில் பேருந்துகள் இடைநிறுத்தப்படுகின்ற உணவகங்களில் உள்ள கழிப்பறை வசதிகளைக் குறித்து அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டிய கட்டாயத்தை அவர் சுட்டிக் காட்டினார்.
அநுரவின் உரை
நண்பர் அதை எனக்குக் கூறுவதற்கு முன்னரே நாட்டின் அரசுத் தலைவராகிய அநுர, கிளீன் ஸ்ரீலங்காவை அறிமுகப்படுத்தும் பொழுது நாடாளுமன்றத்தில் பின்வருமாறு உரையாற்றியிருந்தார்…
”நம் நாட்டுப் பெண்கள் கழிப்பறைக்குச் செல்ல இந்த நாட்டில் சுத்தமான கழிப்பறை அமைப்பு இருக்கிறதா என்பதும் கேள்விக்குரியாகும், தூர இடங்களில் இருந்து கொழும்புக்கு வரும் சில பெண்கள் வீடு வரும் வரை தண்ணீர் அருந்துவதில்லை.
சுத்தமான கழிப்பறை கட்டமைப்பொன்று இல்லாமையே அதற்கு காரணமாகும். கழிப்பறை கட்டமைப்பு கட்டப்பட்டாலும், சமூகத்தில் நல்ல மனப்பான்மை கட்டியெழுப்பப்படவில்லை.
சாதாரண மக்களுக்கு பொது இடமாக அன்றி அவை அழிவுகரமான இடமாக மாறியுள்ளன. இதனால் என்ன தெரிகிறது? இது எமது நாட்டு ஒரு குறிப்பிட்ட மக்கள் குழுவிடம் காணப்படுகின்ற அணுகுமுறையாகும். எனவே,தூய்மையான இலங்கை வேலைத் திட்டத்தின் ஊடாக அவ்வாறான மனோபாவத்தையும் மாற்ற எதிர்பார்க்கின்றோம்.
” அநுர அவ்வாறு பேசியபோதுதான் எனக்கு ஒரு விடயம் தெரிந்தது என்னவென்றால்,தமிழ்ப் பெண்களைப் போலவே சிங்கள, முஸ்லிம் பெண்களுக்கும் உள்ள பொதுவான பிரச்சினை அதுவென்று.
யாழ்ப்பாணத்துக்கும் கொழும்புக்கும் இடையிலான பயணப் போக்குவரத்து நேரம் கிட்டத்தட்ட ஏழு மணித்தியாலம்.இக்காலப் பகுதியில் பெரும்பாலான பெண்கள் நீர் அருந்துவதில்லை. ஏன் என்று கேட்டால் இடையில் அவர்கள் சிறுநீர் கழிப்பதற்காக நிறுத்தும் இடங்களில் சிறுநீர் கழிக்க முடியாது.அவை அசுத்தமாகவும் அருவருப்பாகவும் இருக்கும்.
அந்த இடத்தை நெருங்கும் பொழுதே துர்வாடை வீசும். அந்த இடத்தில் கால் வைப்பதற்கே கூசும். முறிகண்டியில் கட்டணம் செலுத்தும் கழிப்பறைகள் உண்டு. அங்கேயும் நிலைமைகள் பாராட்டும் அளவுக்குச் சுகாதாரமாக இல்லை.
பொதுக் கழிப்பறைகளை தொடர்ச்சியாகக் கழுவி, துப்புரவாகப் பேண மாட்டார்கள். அந்த அசிங்கத்துக்குள் போனால் சகல நோய்களும் தொற்றிக்கொண்டு விடும் என்ற அச்சம் ஏற்படும்.
எனவே சிறுநீர் கழிப்பதற்கு ஒரு நரகத்துக்குள் போவதை விடவும்,சிறுநீரை 6 மணித்தியாலங்களுக்கு அடக்கி கொண்டிருப்பதை விடவும், நீரைக் குடிக்காமல் விடலாம் என்று ஒரு பகுதி பெண்கள் கருதுகிறார்கள். இதுவும் ஆபத்தானது.
நீண்ட தூர, நீண்ட நேரப் பயணங்களில் நீரிழப்பால் உடலுக்கு ஏற்படக்கூடிய ஆபத்து அதிகம். அது சொகுசு வாகனம்தானே? குளிரூட்டப்பட்டதுதானே? நீர் இழப்பு குறைவாக இருக்கும் என்று ஒரு விளக்கம் கூறப்படலாம்.
பொதுப் போக்குவரத்து வாகனங்கள்
அவ்வாறு சொகுசு வாகனம், சொகுசுப் பயணம் என்று கூறி அதற்குத் தனியாகப் பணம் அளவிடும் வாகன உரிமையாளர்கள் ஏன் தாங்கள் வாகனங்களை நிறுத்தும் இடங்களிலும் சொகுசான, வளமான, சுகாதார வசதிகளைக் கொண்ட கழிப்பறைகளைக் கட்டக் கூடாது? பொதுப் போக்குவரத்து வாகனங்களை சாப்பாட்டு இடைவேளைக்காக அல்லது சிரம பரிகாரத்துக்காக எங்கே நிறுத்துவது என்பதனை பயணிகள் தீர்மானிக்க முடியாது.
வாகன உரிமையாளர்களும் சாரதிகளும் தான் அதைத் தீர்மானிக்கிறார்கள்.அது வாகன உரிமையாளருக்கும் குறிப்பிட்ட சாப்பாட்டுக் கடைக்கும் இடையிலான ஒரு வணிக உடன்படிக்கை. இருதரப்புக்கும் அங்கு லாபம் உண்டு.
பயணிகளை வைத்துப் பணம் சம்பாதிக்கும் இந்த இரண்டு தரப்புக்கும் பயணிகளுக்கான கழிப்பறைகளை சுகாதாரமாக பேண வேண்டிய பொறுப்பு உண்டு. அவர்கள் வாங்கும் பயணச் சீட்டுக்குள் அந்தச் செலவும் அடங்குகிறது.
பயணிகளின் கழிப்பறை வசதிகளை சுகாதாரமாகப் பேண வேண்டியது அவர்களுடைய பொறுப்பு. அதற்கும் சேர்த்துத்தான் கட்டணம் அளவிடப்படுகிறது.
எனவே இந்த விடயத்தில் நீண்ட தூரப் பயணங்களில் ஈடுபடும் வாகன உரிமையாளர்களுக்கும் சாரதிகளுக்கும் அவர்கள் எந்தெந்த இடங்களில் நிறுத்துகிறார்களோ அந்த இடங்களில் உள்ள உணவக உரிமையாளர்களுக்கும் கூட்டுப் பொறுப்பு உண்டு.
இவை அனைத்தையும் நிர்வகிக்க வேண்டிய பொறுப்பு அரசாங்கத்துக்கு உண்டு. இந்த விடயத்தில் பெண்கள் படும் அவஸ்தை தெரிந்த ஒருவர் இப்பொழுது அரசுத் தலைவராக இருக்கிறார்.
எனவே அவர் இந்த விடயத்தில் உடனடியாகக் கை வைக்கலாம். வசதியான குடும்பங்களைச் சேர்ந்தவர்கள், தனி வாகனங்களில் பயணம் செய்கிறவர்கள் விரும்பிய, சுகாதாரமான, வசதியான இடத்தில் நிறுத்திச் சிறுநீர் கழிக்கலாம்.
பொதுக் கழிப்பறை
குறைந்தது காட்டுப்பகுதிகளிலாவது வாகனத்தை நிறுத்திச் சிறுநீர் கழிக்கலாம்.தென்னிலங்கை நகரங்களில் வளமான ரெஸ்ரோரன்களில் சுகாதார வசதிகள் கூடிய கழிப்பறைகள் உண்டு.
ஆனால் பொதுப் போக்குவரத்து வாகனங்களைப் பயன்படுத்தும் பெண்களுக்குத்தான் இந்தத் தண்டனை. நாட்டின் பெண்கள் நீண்ட தூரப் பயணங்களில் சிறுநீரை அடக்கிக் கொண்டு பயணம் செய்கிறார்கள் அல்லது சிறுநீர் கழிப்பதை தவிர்ப்பதற்காக நீர் அருந்தாமல் சிறுநீர் பையை பழுதாக்குகிறார்கள் என்பது நாட்டின் வாழ்க்கை தரத்தை காட்டும் ஒரு குறிகாட்டி.
சுகாதாரம், பால் சமத்துவம், பாதுகாப்பான பயணம் போன்ற பல்வேறு நோக்கு நிலைகளில் இருந்தும் கவனத்தில் எடுத்துக் கொள்ளப்பட வேண்டிய ஒரு விடயம். ஒரு நாட்டின் பொதுச் சுகாதாரக் குறிக்காட்டிகளில் ஒன்று பொதுக் கழிப்பறையாகும்.
மேற்கத்திய பண்பாட்டில் பொதுக் கழிப்பறைகள் பெரியவைகளாகவும் சுத்தமானவர்களாகவும் இருக்கும். அவற்றைத் தொடர்ச்சியாகப் பராமரிப்பார்கள்.
அவை பெருமளவுக்கு உலர் கழிப்பறைகள்தான். அவற்றை தொடர்ச்சியாகச் சுத்தமாகப் பேணும் ஒரு பண்பாடு அங்கு வளர்ந்திருக்கிறது. கழிப்பறைகளைப் பராமரிப்பது மட்டுமல்ல பொதுமக்கள் கழிப்பறைகளைச் பொறுப்போடு சுத்தமாக சுகாதாரமாகப் பயன்படுத்துவதும் ஒரு பண்பாடுதான்.
அந்தப் பண்பாடு அங்கே வளர்ந்திருக்கிறது. அது அந்த சமூகங்களின் சமூகத் தராதரத்தை விழுமியங்களை, கூட்டுப் பொறுப்புணர்ச்சியை வெளிக்காட்டும் விடயங்களில் ஒன்று.
ஆனால் ஆசிய ஆபிரிக்க நாடுகளில் நிலைமை அவ்வாறு இல்லை.பொதுக் கழிப்பறை என்றாலே அசுத்தமானது, அடிவருப்பானது, துர் வாடை வீசுவது, இலையான் மொய்ப்பது என்று நிலைமைதான் பொதுப் போக்காக உள்ளது.
மேட்டுக்குடி அரசியல் பாரம்பரியத்தில் வராத அநுர இது தொடர்பாக நாடாளுமன்றத்தில் உரையாற்றியது வரவேற்கத்தக்கது.
அதேசமயம் அவர் கூறுவதுபோல நெடுந்தூரப் பயணங்களில் தமிழ் நோக்கு நிலையில், இது ஒன்று மட்டும்தான் விவகாரம் இல்லை என்று வாகன உரிமையாளர்களும் சாரதிகளும் முறைப்பாடு செய்கிறார்கள்.
நீண்ட தூரப் பயணங்களில் குறிப்பாக இரவு வேளைகளில் யாழ்ப்பாணத்துக்கும் கொழும்புக்கும் இடையிலான பயண வழியில் தமது வாகனங்கள் அடிக்கடி பொலிசாரால் மறிக்கப்படுவதாக அவர்கள் குற்றம் சாட்டுகிறார்கள்.
போர்க் காலங்களில் தமிழ் மக்கள்
அவ்வாறு மறிக்கப்பட்டு பொலிஸ் நிலையத்துக்கும் நீதிமன்றத்துக்கும் அலைக்கழிக்கப்படுவதை விடவும் அவர்கள் கேட்கும் காசைக் கொடுத்துவிட்டு ஓடித் தப்புவதுதான் புத்திசாலித்தனமானது என்று பல சாரதிகள் கருதுவதாக ஒரு பொதுவான அபிப்பிராயம் உண்டு.
இந்த நடைமுறை தமிழர்களுடைய பயண வழிகளில் தான் அதிகமாக உண்டு என்றும் தென்னிலகையில் ஏனைய நெடுந்தூரப் பயண வழிகளில் இந்தளவுக்குச் சோதனைகள் இல்லை என்றும் ஓர் ஒப்பீடு உண்டு. போர்க் காலங்களில் தமிழ் மக்கள் அதனை தமக்கு எதிரான கூட்டுத் தண்டனையின் ஒரு பகுதியாக விளங்கி வைத்திருந்தார்கள்.
ஆனால் கடந்த 15 ஆண்டுகளாகவும் அந்தத் தண்டனை தொடர்கிறதா? அப்படியென்றால் அதை உடனடியாக நிறுத்த வேண்டிய பொறுப்பு அரசாங்கத்துக்கு உண்டு. ஏனென்றால் நிறைவேற்று அதிகாரமுடைய அரசுத் தலைவரால் தமிழ்ச் சாரதிகளும் வாகன உரிமையாளர்களும் முன்வைக்கும் குற்றச்சாட்டுகள் உண்மையானவையா இல்லையா என்பதனை விசாரித்து அறிவது கடினமானது அல்ல.
மூன்றில் இரண்டு பெரும்பான்மையைக் கொண்ட ஒரு அரசாங்கமும் நிறைவேற்று அதிகாரங்களைக் கொண்ட ஓர் அரசுத் தலைவரும் நினைத்தால் முடிவுக்கு கொண்டு வரக்கூடிய விடையங்கள் இவை. அரசியல்,பொருளாதாரத் தளங்களில் அரசாங்கத்துக்கு வரையறைகள் உண்டு.
வெளி நிர்பந்தங்கள் இருக்கலாம்.ஆனால் பொதுக் கழிப்பறைகள் சுகாதாரமாகப் பேணப்படுகின்றனவா என்பதைக் கண்காணிப்பதற்கும் பொது போக்குவரத்து வாகனங்கள் குறிப்பாக தமிழ் வாகனங்கள் போலீசாரால் அதிகம் மறைக்கப்படுகின்றனவா என்பதனை விசாரிப்பதற்கும் அரசாங்கத்தால் முடியும்.உடனடியாக முடியும்.
சிறிலங்காவை கிளீன் பண்ணக்கூடிய சாத்தியமான இடங்கள் இவை. அரசாங்கம் அதைச் செய்யுமா? கடந்த தைப் பிறப்பிலன்று வன்னியிலிருந்து ஒரு குடும்பம் வாகனத்தில் யாழ்ப்பாணத்துக்கு வந்தது.
முன்னிரவு வேளை. கும்மிருட்டுக்குள் நின்று பொலிஸார் மறித்தார்கள், கள்வர்களைப் பிடிப்பதுபோல மறைவில் நின்றார்கள். அங்கே தெருவிளக்குகள் இருக்கவில்லை பொலிஸாரிடம் டோர்ச் லைட்கள் இருக்கவில்லை.
பதிலாக கைபேசி டோர்ச் லைட்டுகளைப் பயன்படுத்தினார்கள். வாகனத்தின் இலக்கத்தையும் ஏனைய விபரங்களையும் பதிய வேண்டும் என்று கூறி சாரதியை இறக்கிக் கொண்டு போனார்கள்.கைபேசியின் டோர்ச் லைட் வெளிச்சத்தில் பதிந்தார்கள்.
அப்பொழுது சாரதி கேட்டார், ஏன் உங்களிடம் டோர்ச் லைட் இல்லையா? இந்தக் கைபேசி டோர்ச் லைட்டை வைத்துக் கொண்டு கள்ளர்களை எப்படிப் பிடிப்பீர்கள்?” என்று. அதற்கு ஒரு பொலிஸ்காரர் தமிழில் சொன்னார் “துப்பாக்கி வைத்திருக்கிறோம் சுட்டுப் பிடிப்போம்” என்று. கிளீன் சிறிலங்கா?
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
பொறுப்பு துறப்பு!
இக்கட்டுரையானது பொது எழுத்தாளர் Nillanthan அவரால் எழுதப்பட்டு, 19 January, 2025 அன்று தமிழ்வின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டது. இக்கட்டுரைக்கும் தமிழ்வின் தளத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை.