கிராம உத்தியோகத்தர் வெற்றிடங்கள் தொடர்பில் வெளியான தகவல்
நாட்டில் காணப்படும் 2,763 கிராம உத்தியோகத்தர் வெற்றிடங்களை நிரப்புவதற்கான பரீட்சை 2023 டிசம்பர் முதல் வாரத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த தகவலை பரீட்சை திணைக்களம் அறிவித்துள்ளதாக பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்றைய தினம் (08.11.2023) இடம்பெற்ற விவாதத்தின் போதே பிரதமர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
வெளியிடப்பட்ட வர்த்தமானி
அவர் மேலும் தெரிவிக்கையில், (30.06.2023) நிலவரப்படி 2, 763 கிராம அலுவலர் பணியிடங்கள் உள்ளன. இலங்கையில் 14,022 கிராம உத்தியோகபூர்வ காரியாலயங்கள் உள்ளதாகவும் ஒரு கிராம உத்தியோகபூர்வ காரியாலயத்திற்கு ஒரு கிராம அதிகாரியாக 14,022 பதவிகள் அங்கீகரிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
அந்த வெற்றிடங்களை உடனடியாக நிரப்பும் வகையில், 28.05.2023 அன்று வெளியிடப்பட்ட வர்த்தமானி இலக்கம் 2230 இல் உள்ள அறிவிப்பில், இலங்கைப் பரீட்சை திணைக்களம் 31.03.2023 அன்று வெற்றிடங்களை நிரப்புவதற்கான பரீட்சையை நடத்துவதாக தெரிவிக்கப்படடிருந்தது.
எஞ்சிய உத்தியோகத்தர்களுக்கான வெற்றிடங்களுக்காக தற்போது அரசாங்க சேவையில் உள்ளவர்கள் தெரிவு செய்யப்படவுள்ள நிலையில், வெற்றிடங்களை நிரப்புவதற்கு அமைச்சரவை அனுமதியும் வழங்கப்பட்டுள்ளது.
பரீட்சை திணைக்களம்
இலங்கை பரீட்சை திணைக்களம் தமது விண்ணப்பங்களைப் பெற்றுக்கொண்ட விண்ணப்பதாரிகளுக்கு 2023 டிசம்பர் மாதம் முதல் வாரத்தில் பரீட்சையை நடத்தவுள்ளது.
இந்த விண்ணப்பங்கள் கோரப்பட்டு இரண்டு ஆண்டுகள் கடந்துள்ளது. அதன்படி தேர்வை நடத்துவதன் மூலம் கிராம உத்தியொகத்தர்கள் நியமிக்கப்படுவார்கள் என தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |