சட்டவிரோதமாக அதிக விலைக்கு டீசல் விற்பனை செய்ய முற்பட்ட நால்வர் கைது (Photos)
திருகோணமலை - கந்தளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கந்தளாய் 87 பகுதியில் சட்டவிரோதமாக அதிக விலைக்கு டீசல் விற்பனை செய்ய முற்பட்ட நால்வர் கந்தளாய் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கந்தளாய் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவலுக்கமைய லொறியின் சாரதி உட்பட நான்கு பேர் நேற்று (01) மாலை கைது செய்யப்பட்டுள்ளதாக கந்தளாய் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்தேக நபர்கள் அதிக விலைக்கு விற்பனை செய்வதற்காக 2740 லிட்டர் டீசலை கந்தளாய் டிப்போவில் இருந்து பொலன்னறுவை ஹிங்குரா கொடைக்கு எடுத்து செல்லும் போது பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதன்போது அவர்களிடம் இருந்த 2740 லிட்டர் டீசலையும் பொலிஸார் மீட்டுள்ளனர்.
பொலிஸார் விசாரணை
மேலும், டீசலை கொண்டு செல்வதற்கு பயன்படுத்தப்பட்ட லொறி கந்தளாய் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சந்தேக நபர்களை தடுத்து வைத்து விசாரணைகளை மேற்கொண்டு வருவதோடு, கந்தளாய்
நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் முன்னிலைப்படுத்த உள்ளதாகவும் பொலிஸார்
தெரிவித்துள்ளனர்.