பெண்ணொருவர் எரிகாயங்களுக்கு உள்ளாகிய நிலையில் சடலமாக மீட்பு
புத்தளம் - அநுராதபுரம் வீதியில் உள்ள வீட்டில் பெண்ணொருவர் எரிகாயங்களுக்கு உள்ளாகிய நிலையில் இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக புத்தளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
புத்தளம் - அநுராதபுரம் வீதியில் வசித்து வந்த நெய்னா மரிக்கார் நுஸ்ரத் ஜஹான் என்ற 36 வயதுடைய பெண்ணொருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த பெண்ணுக்கும் அவரது இரண்டாவது கணவருக்கும் சில நாட்களாகச் சண்டை இடம்பெற்று வந்துள்ள நிலையில் நேற்று இரவும் இவ்வாறு இருவருக்குமிடையில் சண்டை இடம்பெற்றுள்ளதாக பொலிஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதேவேளை குறித்த பெண்ணின் இரண்டாவது கணவர் புத்தளம் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளார்.
குறித்த வீட்டில் இரத்த கறைகளும் காணப்பட்டதாகவும், குறித்த பெண்ணை இரண்டாவது கணவர் கொலை செய்திருக்கலாமென தாம் சந்தேகிப்பதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த பகுதிக்கு பொலிஸார் மற்றும் தடயவியல் பொலிஸ் பிரிவினர் சென்று பார்வையிட்டதுடன், விசாரணைகளையும் முன்னெடுத்து வருகின்றனர்.



