பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் புதிய சாதனை படைத்த டேவிட் வார்னர்
பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் டேவிட் வார்னர் சதமடித்து புதிய சாதனையொன்றை படைத்துள்ளார்.
போட்டியின் முதல் நாளான இன்று (14.12.2023) 211 பந்துகளில் 164 ஓட்டங்களை எடுத்ததன் மூலம் டெஸ்ட் போட்டிகளில் அதிக ஓட்டங்களை குவித்த முதல் 5 அவுஸ்திரேலிய வீரர்களின் பட்டியலில் நுழைந்து வார்னர் சாதனை படைத்துள்ளார்.
இதுவரை 110 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள டேவிட் வார்னர் 8651 ஓட்டங்களை குவித்து, டெஸ்ட் போட்டிகளில் அதிக ஓட்டங்களை குவித்த அவுஸ்திரேலியர்களின் பட்டியலில் 5 ஆவது இடத்தில் உள்ளார்.
பிரியாவிடை டெஸ்ட் தொடர்
அவுஸ்திரேலியாவின் பேர்த் மைதானத்தில் நடைப்பெற்று வரும் இந்த போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற அவுஸ்திரேலிய அணி தலைவர் பெட் கம்மின்ஸ் முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தார்.
இதனையடுத்து, ஆரம்ப துடுப்பாட்ட வீரராக களமிறங்கிய டேவிட் வார்னர் அதிரடியாக விளையாடி தனது 26 ஆவது டெஸ்ட் சதத்தை எட்டிப்பிடித்து 164 ஓட்டங்களுடன் வெளியேறினார்.
முதல் நாள் முடிவான இன்று அவுஸ்திரேலிய அணி 5 விக்கெட்டுக்களை இழந்து 364 ஓட்டங்களை பெற்றிருந்தது.
பாகிஸ்தான் அணிக்கு எதிரான இந்த டெஸ்ட் தொடர் வார்னரின் பிரியா விடை டெஸ்ட் தொடர் என்பது குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |