வரலாறு காணாத கடும் வெப்ப அலை : ஐரோப்பிய நாடுகள் திணறல்
மேற்கு ஐரோப்பிய நாடுகளில் முன்னெப்போதும் இல்லாத வகையில் கடுமையான வெப்ப அலை வீசி வருவதால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
பிரான்சில் பகல் மற்றும் இரவு நேர சராசரி வெப்பநிலையானது 29.8 டிகிரி செல்சியஸை எட்டியுள்ளது. இது 1947ஆம் ஆண்டிற்குப் பிறகு பதிவான மிக உயர்ந்த சராசரி வெப்பநிலையாகும்.
இந்த அதீத வெப்பத்தின் காரணமாக மின்மாற்றிகளில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறால், பிரான்சின் வடமேற்குப் பகுதியான ஃபினிஸ்டெரேயில் சுமார் 68,000 வீடுகள் இருளில் மூழ்கின.
பாடசாலைகள் மூடல்
நாடு முழுவதும் ஒரு இலட்சத்திற்கும் அதிகமான நுகர்வோர்கள் மின்தடையால் பாதிக்கப்பட்டுள்ளதோடு, மின்விசிறிகள் மற்றும் குளிர்சாதனப் பெட்டிகளின் விற்பனை வரலாறு காணாத அளவில் அதிகரித்துள்ளது.
இந்த வெப்ப அலையின் தாக்கம் பிரான்ஸ் மட்டுமின்றி மற்ற ஐரோப்பிய நாடுகளையும் உலுக்கி வருகிறது.

பிரித்தானியாவில் வெப்பத்தின் தாக்கம் அதிகமாக உள்ளதால் நூற்றுக்கணக்கான பாடசாலைகள் மூடப்பட்டுள்ளன அல்லது முன்கூட்டியே விடுமுறை விடப்பட்டுள்ளன.
தண்டவாளங்கள் வெப்பமடைவதைத் தவிர்க்க தொடருந்து சேவைகளும் குறைக்கப்பட்டுள்ளன.
உலகளாவிய புவி வெப்பமயமாதல்
லண்டன் மற்றும் தெற்கு இங்கிலாந்தில் வெப்பநிலை 39 டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும் என அந்நாட்டு வானிலை மையம் எச்சரித்துள்ளது.

இதேபோல், இத்தாலி நாட்டின் மிலன் மற்றும் ரோம் உள்ளிட்ட 16 நகரங்களுக்கு 'சிவப்பு எச்சரிக்கை' விடுக்கப்பட்டுள்ளது.
இந்த வெப்ப அலை வரும் நாட்களில் போலந்து, குரோஷியா, ஹங்கேரி உள்ளிட்ட கிழக்கு ஐரோப்பிய நாடுகளுக்கும் பரவக்கூடும் என்று விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.
உலகளாவிய புவி வெப்பமயமாதலே இத்தகைய தீவிர வானிலை மாற்றங்களுக்கு முக்கியக் காரணம் என்று ஆய்வாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
கட்டுநாயக்க விமானத்தில் காத்திருந்த வெளிநாட்டு யுவதி - பைக்குள் இருந்த பெறுமதியான பொருள்: அதிரடி கைது