நெடுங்கேணி மத்திய பேருந்து நிலைய புனரமைப்பு பணி விரைவில்...
நெடுங்கேணி மத்திய பேருந்து நிலையத்திற்குள் பேருந்துகளைச் செல்வதற்கு நடவடிக்கை எடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் வடக்கு மாகாண வீதி பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் தலைவர் சூ. விமலேஸ்வரன் பணிப்புரை விடுத்துள்ளார்.
பேருந்து நிலையம் புனரமைப்பு
வவுனியா வடக்கு, நெடுங்கேணி மத்திய பேருந்து நிலையத்தில் இதுவரை காலமும் பேருந்துகள் நிறுத்தப்படுவதில்லை என பொதுமக்களால் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டைத் தொடர்ந்து, அவர் நேரில் சென்று பேருந்து நிலையத்தின் நிலைமைகளைப் பார்வையிட்டுள்ளார்.

இதன்போது, பேருந்துகள் கட்டாயமாக பேருந்து நிலையத்திற்குள் சென்று பயணிகளை ஏற்றிச் செல்லுமாறு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும், எதிர்வரும் 01.09.2026 முதல் பேருந்து நிலையத்திற்குள் செல்லாத பேருந்துகளுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்தக் கள விஜயத்தில் வவுனியா வடக்கு உதவித் தவிசாளர் வி. சஞ்சீவன் மற்றும் பிரதேச சபை உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.