புனரமைக்கப்பட்ட எயிட்டி கிளப் பிரதமரினால் திறந்து வைப்பு
கொழும்பு 07-இல் அமைந்துள்ள புனரமைக்கப்பட்ட எயிட்டி கிளப் (80 Club) கேளிக்கை விடுதி பிரதமர் மகிந்த ராஜபக்ச(Mahinda Rajapaksa) தலைமையில் நேற்று (21) இரவு திறந்து வைக்கப்பட்டுள்ளது.
எயிட்டி கிளப்பினை உத்தியோகப்பூர்வமாகத் திறந்து வைக்கும் முகமாகப் பிரதமர் அவ்வளாகத்தினை மின் விளக்குகளினால் ஒளிரச் செய்ததுடன், நினைவுப் பலகையையும் திறந்து வைத்துள்ளார்.
அதனை தொடர்ந்து சிறப்பு விருந்தினர் புத்தகத்திலும் பிரதமர் கையெழுத்திட்டுள்ளார். இதன்போது நகர அபிவிருத்தி அதிகாரசபையின் தலைவர் உதய நாணயக்காரவினால் எயிட்டி கிளப் தகவல் சிற்றேடு பிரதமருக்கு வழங்கப்பட்டுள்ளது.
புனரமைப்பு பணிகளை மேற்கொண்டமைக்காக கடற்படை கொமடோர் எச்.எஸ்.பாலசூரியவுக்கு பிரதமரினால் நினைவுப் பரிசொன்று வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
எயிட்டி கிளப் 2020ஆம் ஆண்டு நவம்பர் மாதம் நகர அபிவிருத்தி அதிகாரசபையினால் கையகப்படுத்தப்பட்டமை தொடர்ந்து அதன் புனரமைப்பு பணிகள் ஆரம்பிக்கப்பட்டன.
அதன் புனரமைப்பு பணிகளைக் கடற்படையினர் பொறுப்பேற்று முன்னெடுத்தனர். கண்டி குயின்ஸ் ஹோட்டலின் அறை எண் 80-இன் உறுப்பினர்கள் சிலர் முதலாவது கூட்டத்தை நடத்தி ஆரம்பித்து வைத்தமையால் இது எயிட்டி கிளப் எனும் பெயரில் அறியப்படுகிறது.
1971 கலவரத்தின் காரணமாக அப்போதைய அரசாங்கம் இவ்வளாகத்தை இலங்கை இராணுவத்திற்கு ஒப்படைத்தது. 1978ஆம் ஆண்டு மீண்டும் அரசாங்கத்தினால் எயிட்டி கிளப்பிற்கு அனுமதி வழங்கப்பட்டது.
2020 நவம்பர் மாதம் நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு ஒப்படைக்கப்படும்வரை இதன் பராமரிப்பு நடவடிக்கைகள் காணி மறுசீரமைப்பு ஆணைக்குழுவினால் முன்னெடுக்கப்பட்டு வந்தன.
நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் என்ற ரீதியில் பிரதமர் மகிந்த ராஜபக்சவின் ஆலோசனைக்கமைய இவ்வேலைத்திட்டம் செயற்படுத்தப்பட்டது.
அதற்கமைய தற்போது எயிட்டி கிளப் அலங்காரமான நிறைவைப் பெற்றுள்ளது. இங்குள்ள வசதிகளை மேலும் மேம்படுத்தி விருந்தோம்பலுடன் கூடிய வோட்டர்ஸ் எட்ஜ் நட்சத்திர ஹோட்டல் அனுவத்தை எயிட்டி கிளப் ஊடாக பெற்றுக்கொடுக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.
குறித்த சந்தர்ப்பத்தில் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ(John Fernando), இராஜாங்க அமைச்சர்
நாலக கொடஹேவா( Nalaka Godahewa), மேல் மாகாண ஆளுநர் ரொஷான் குணதிலக, நகர அபிவிருத்தி மற்றும்
வீடமைப்பு அமைச்சின் செயலாளர் சிறிநிமல் பெரேரா, நகர அபிவிருத்தி
அதிகார சபையின் தலைவர் உதய நாணயக்கார, நகர அபிவிருத்தி அதிகாரசபையின்
பணிப்பாளர் நாயகம் பிரசாத் ரணவீர, எயிட்டி கிளப் தலைவர் ரொஹந்த ஃபொன்சேகா
உள்ளிட்ட பலர் கலந்து கொண்டுள்ளனர்.
