மட்டக்களப்பில் சட்ட விரோதமாக மண் அகழ்வு! (Photos)
மட்டக்களப்பு - கரடியனாறு, கித்துள் ஆற்றில் இரவில் சட்டவிரோதமாக மண் அகழ்ந்து குவிக்கப்பட்ட 15 கீப் கொண்ட ஆற்று மணலை மீட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மாவட்ட குற்றப் புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த தகவல் ஒன்றின் பிரகாரம் சம்பவதினமான இன்று காலை கரடியனாறு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி துஷர தலைமையிலான பொலிஸ் குழுவினர் குறித்த மண் குவிக்கப்பட்ட இடத்திற்கு சென்றுள்ளனர்.
சட்டவிரோத மண் அகழ்வு
மண் மாபியாக்கள் ஆற்றில் மண் அகழ்விற்கு அனுமதி இல்லாத நிலையில், இரவு வேளைகளில் ஆற்றில் இருந்து மணல்களை அகழ்ந்து இரவேடு இரவாக இந்த பகுதியில் குவித்துவிட்டு பின்னர் மண்யாட்டில் இருந்து மண் ஏற்றிச் செல்வதற்கான அனுமதிப்பத்திரம் உள்ள வாகனத்தில் மண்ணை ஏற்றி கொண்டும் செல்லும் சட்டவிரோத நடவடிக்கையினை செய்துவருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதன் ஒரு செயற்பாடு தான் இந்த மண்ணை அகழ்ந்து குவிக்கப்பட்டுள்ளதாக பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதனையடுத்து அங்கு சுமார் 15 கீப் கொண்ட மண் குவிக்ப்பட்டுள்ளதுடன், எவரும் இதற்கு அனுமதி கோராத நிலையில் இருந்துள்ளதை அடுத்து அந்த மணல்களை பொலிஸார் மீட்டு அதனை கனரக வாகனங்களில் ஏற்றிச் சென்று பொலிஸ் நிலையத்தில் குவிக்கப்பட்டு உள்ளது.
அத்துடன் அதனை நீதிமன்றில் சமர்ப்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுவருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக மேலதிக விசாரணைகளை கரடியனாறு பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.