கந்தகாடு புனர்வாழ்வு நிலைய மோதல் தொடர்பில் புனர்வாழ்வு ஆணையாளர் நாயகத்தின் தகவல்
கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் புதிதாக அனுமதிக்கப்பட்ட போதைப்பொருளுக்கு அடிமையானவர்களே அங்கு ஏற்பட்ட மோதல்களுக்கு காரணமென புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் மேஜர் ஜெனரல் தர்சன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.
ஜனவரி 12ஆம் திகதி வெள்ளிக்கிழமை இந்த மோதல் சம்பவம் ஆரம்பமானதோடு வெவ்வேறு பகுதிகளில் இருந்து வந்த போதைக்கு அடிமையானவர்கள், குழுக்களை உருவாக்கி ஒருவருக்கொருவர் மோதிக்கொண்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
உணவு வேளையின்போது இந்த மோதல் சம்பவம் இடம்பெற்ற அதேவேளை, இதன்போது முகாமில் இருந்து சுமார் 90 பேர் தப்பி ஓடியுள்ளனர்.
காணாமல் போன கைதிகள்
இதில் சுமார் 20 கைதிகளை இன்னும் காணவில்லை என்பதோடு இவர்களில் 15 முதல் 20 ஆண்டுகளாக போதைப்பொருள் உட்கொள்பவர்களும் உள்ளனர்.
மோதல்களை முற்றாக நிறுத்தும் வரையில் காணாமல் போன கைதிகளின் துல்லியமான எண்ணிக்கையை வழங்க முடியாது என தர்சன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.
இதேவேளை, நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்படும் யுக்திய நடவடிக்கை காரணமாக போதைப்பொருட்களை நுகரும் பலரும் இந்த முகாமில் சேர்க்கப்பட்டமையினால் நெரிசல் அதிகரித்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |