உயிரை பணயம் வைக்க தயார் : அப்பாவி கட்டுமான தொழிலாளியின் கோரிக்கை
தற்போது நாட்டில் அத்தியாவசிய பொருட்கள் உள்ளிட்ட பலவற்றின் விலைகள் அதிகரித்துள்ளன.
இதன்காரணமாக அன்றாட கூலித் தொழிலாளர்களும் நடுத்தர நிலையில் இருக்கும் மக்களும் என பலரும் பெரிதும் பாதிப்பை எதிர்நோக்கியுள்ளனர்.
சீமெந்து விலை அதிகரிப்பின் காரணமாக நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படுகின்ற கட்டுமாணப்பணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதோடு, குறித்த கட்டுமாணப் பணியை நம்பி இருக்கும் தொழிலாளர்களும் தமது வாழ்வாதாரத்தைக் கொண்டு செல்லும் வழி தெரியாமல் அல்லல்படுகின்றனர்.
அந்த வகையில் போராட்டத்தில் குதித்துள்ள பொதுமகன் ஒருவர் தனது ஆதங்கத்தை இவ்வாறு பதிவு செய்கிறார்,
“நான் கட்டுமான தொழில் செய்பவர். நாடு முழுவதும் உள்ள கட்டுமான பணிகளில் ஈடுபடுபவர்களுக்காகவும், உதவியாளர்களுக்காகவும், நான் இன்று வீதிக்கு இறங்கியுள்ளேன்.
இன்று சீமெந்து இல்லை, டைல் இல்லை அதனால் வேலையும் இல்லை. இன்று ஒரு டைலின் விலை 1380/= , 100 டைல்களை வாங்கினால் 138,000/= அந்த விலைக்கு எம்மால் வாங்க முடியாது.
அது மாத்திரம் மின்றி சீமெந்து வாங்க வேண்டும், ஏனைய பொருட்கள் வாங்க வேண்டும். வீட்டு கூலி கட்ட வேண்டும். ஒரு அரச உத்தியோகத்தரால் கூட இந்த விலைக்கு வாங்க மாட்டார்கள்.
சீமெந்து 1550/=. இதனால் சீமெந்து வாங்க முடியாமல் உள்ளோம். இந்த நிலையில் எம் பிள்ளைகளுக்கு சரியாக உண்பதற்கு கொடுக்க முடியாமல் உள்ளது. உயிரை பணயம் வைத்தாவது இந்த போராட்டத்தில் நான் வெற்றி பெறுவேன்.
எனவே நான் வேலைக்கு தேவையான பொருட்களை எடுத்துக்கொண்டு இன்று இவ்வாறு வீதிக்கு இறங்கியுள்ளேன். இவை அனைத்திற்கும் சலுகை விலையை கொடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். சீமெந்தை சலுகை விலைக்கு வழங்குமாறு அதிகாரிகளிடம் நான் கேட்டுக்கொள்கின்றேன்”. என குறிப்பிட்டுள்ளார்.
