சிறிலங்கா சுதந்திரக் கட்சியை ரணிலிடம் ஒப்படைக்க தயாராகும் நாடாளுமன்ற உறுப்பினர்கள்!
சிறிலங்கா சுதந்திரக் கட்சியை ஒரு குழுவினர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் ஏலம் விட திட்டமிடுவதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குற்றம் சுமத்தியுள்ளார்..
இன்று நடைபெற்ற விசேட ஊடக சந்திப்பின்போதே அவர் இந்த அறிவிப்பை விடுத்துள்ளார்.
விஜயதாச ராஜபக்ச தொடர்பில், நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர நேற்று தெரிவித்த கருத்து தொடர்பில் விளக்கமளிக்கையிலேயே அவர் இதனை கூறியுள்ளார்.
விஜயதாச ராஜபக்ச சுதந்திரக்கட்சி உறுப்பினர்தான், அவருக்கு எதிராக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகளை நான் நிராகரிக்கின்றேன்.நாட்டுக்காக துணிந்து செயற்படும் அரசியல்வாதியே அவர்” எனவும் மைத்திரிபால குறிப்பிட்டுள்ளார்.
தயாசிறி ஜயசேகர
இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர நேற்று தெரிவித்த கருத்தை நான் கண்டித்து முற்றாக நிராகரிக்கின்றேன்.
சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தற்போதைய நிலைக்கு தாம் மட்டுமே பொறுப்பு என தயாசிறி ஜயசேகர கூறியிருப்பது முற்றிலும் பொய்யானது.
நான் அதை விரிவாக விவரிக்க விரும்பவில்லை. ஜனாதிபதி வேட்பாளர் விஜயதாச ராஜபக்ச சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர் அல்ல என்றும், அவரை எமது கட்சியின் வேட்பாளராக முன்னிறுத்துவதற்கு எவ்வித தீர்மானமும் எடுக்கப்படவில்லை எனவும் தயாசிறி குறிப்பிட்டுள்ளார்.
இந்த கருத்துக்கள் அனைத்தும் முற்றிலும் தவரானவை.
விஜயதாச ராஜபக்ச சிறிலங்கா சுதந்திரக் கட்சியில் இருந்து அரசியலில் பிரவேசித்ததுடன், 2006-2007 ஆம் ஆண்டு மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தினால் அரசாங்கத்தின் பாரிய மோசடி, ஊழல் மற்றும் பொது நிதி ஊழலை எதிர்த்ததன் காரணமாகவே அவர் வெளியேற்றப்பட்டதை நினைவுகூர விரும்புகின்றேன்.
நீதிக்காக நிற்கும் அரசியல்
விஜயதாச தனது தனிப்பட்ட அரசியல் இலாபங்களை எப்பொழுதும் ஒதுக்கி வைத்துவிட்டு நியாயம் மற்றும் நீதிக்காக நிற்கும் மூத்த அரசியல்வாதி.
அத்துடன் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவளிக்க ஒருசில சந்தர்ப்பவாதிகளால் மேற்கொள்ளப்பட்ட சதித்திட்டத்திற்கு எதிராக அவர், உண்மையான சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக உறுதிசெய்யப்பட்டு ஏகமனதாக நிறைவேற்றப்பட்டதையும் ஞாபகப்படுத்த விரும்புகின்றேன்.
விஜயதாச ராஜபக்சவை நிறைவேற்று சபையினால் எமது கட்சியின் பதில் தலைவராக நியமிக்கப்படுவதற்கு முன்னரே அவருக்கு கட்சி உறுப்புரிமை அரசியலமைப்பு ரீதியில் வழங்கப்பட்டிருந்தது என்பதையும் நான் வலியுறுத்த விரும்புகின்றேன்.
நேற்றைய தினம் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த தயாசிறி ஜயசேகர, சிறிலங்கா சுதந்திரக் கட்சியால் அடுத்த ஐந்து வருடங்களுக்கு வாழ முடியாது எனவும், எனவே யாராவது ஒரு வேட்பாளருக்கு ஆதரவளிக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.
அதன்படி, அவர் எதற்காகத் தயாராகிறார் என்பது தெளிவாகத் தெரிகிறது.
சுதந்திரக் கட்சி
ஒரு குழுவினர் சிறிலங்கா சுதந்திரக் கட்சியை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் ஏலம் விட முயல்வதும், மற்றொரு குழுவினர் தமது தனிப்பட்ட அரசியல் இலாபங்களுக்காகவே எமது கட்சியை மக்கள் சக்தியின் ஒற்றுமைக்கு காட்டிக் கொடுப்பதற்கும் செயற்படுவது மிகத் தெளிவாகத் தெரிகிறது.
எவ்வாறாயினும் ஜனாதிபதித் தேர்தலில் சுயாதீன வேட்பாளர் ரணில் விக்ரமசிங்கவுக்கோ அல்லது ஐக்கிய மக்கள் சக்தி கூட்டணியின் வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கோ நான் ஆதரவு வழங்கமாட்டேன்
தயாசிறி ஜயசேகர மற்றும் பலர் ஏற்கனவே ஆகஸ்ட் 8 ஆம் திகதி சஜித் தரப்புடன் இணைந்து கொள்ள இணங்கியுள்ளனர்.
முடிந்தால் இது தொடர்பில் செய்து கொள்ளப்பட்ட உடன்படிக்கைகளை வெளியிடுமாறு நான் அவருக்கு சவால் விடுகின்றேன்.
தற்போதைய சமூக அரசியல் பொருளாதார நெருக்கடியை நிர்வகிப்பதற்கு மிகவும் பொருத்தமான நபரான விஜயதாச, வெற்றி வேட்பாளராக பல்வேறு நபர்கள் ஊடகங்கள் ஊடாக வெளியிடும் பொய்யான சந்தர்ப்பவாத அறிக்கைகளுக்கு ஏமாந்து செயற்பட வேண்டாம் என தெரிவித்துக்கொள்கின்றேன்” என கூறப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |