மொட்டுடனான உறவைத் துண்டித்தால் கூட்டணி தொடர்பில் பேசத் தயார் : சஜித் அணி தெரிவிப்பு
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியுடனான (SLPP) உறவை முறித்துக் கொண்டால் எமது கட்சியுடன் கூட்டணி அமைப்பது தொடர்பில் பேச்சு நடத்தலாம்.என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்துள்ளார்.
"எம்மை இணைத்துக்கொள்வதற்குரிய தேவைப்பாடு ரணில் விக்ரமசிங்கவுக்கு இருக்கலாம். ஆனால், ஐக்கிய தேசியக் கட்சியுடன் (UNP) இணையும் திட்டம் எமக்கு இல்லை.
நாட்டில் பிரதான அரசியல் கட்சி ஐக்கிய மக்கள் சக்தியாகும். எனவே, ஐக்கிய தேசியக் கட்சியுடன் பயணிக்கும் எந்த தேவைப்பாடும் எமக்குக் கிடையாது.
சஜித் தலைமையில் தனிக்கட்சி
ரணில் விக்ரமசிங்கவின் தலைமைத்துவம் தொடர்பில் இருந்த பிரச்சினை காரணமாகவே வெளியேறி நாம் சஜித் பிரேமதாஸ தலைமையில் தனிக்கட்சி அமைத்தோம்.
வெற்றியை நோக்கி எமது கட்சி பயணித்துக்கொண்டிருக்கின்றது. எம்முடன் கூட்டணி அமைப்பதற்கு பல கட்சிகளும் முன்வந்துள்ளன.
இந்நிலையில், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியுடனான உறவை முறித்துக்கொண்டு சஜித் பிரேமதாஸ தலைமையில் இணைந்து செயற்பட ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்கள் முன்வந்தால் அது பற்றி பேச்சு நடத்தலாம்." என்றும் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |