முல்லைத்தீவு தொடர்பில் அநுர அரசிடம் ரவிகரன் முன்வைத்துள்ள கோரிக்கை
நில உரிமைக்கான போராட்டம், நினைவேந்தல் மற்றும் வழிபாட்டு உரிமைகளுக்கான போராட்டம், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான நீதி கோரும் போராட்டம் என கடந்தகால அரசாங்கங்கள் முல்லைத்தீவை தொடர் போராட்டங்களால் தகிக்கத்தக்கவாறு கையாண்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார்.
இவ்வாறு போராட்டங்களால் தகித்துக்கிடக்கின்ற முல்லைத்தீவை தணிக்கத்தக்கவாறு அநுர அரசு செயற்பட வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளார்.
நாடாளுமன்ற அமர்வில் நேற்றைய தினம் (09.10.2025) கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
மேலும் கருத்துத் தெரிவிக்கையில், இலங்கையிலே மிகவும் மோசமாக கட்டமைக்கப்பட்ட இன அழிப்புக்கு - பௌத்தமயமாக்கலுக்கு உட்படுகின்ற மாவட்டங்களில் முதலாவதாகவும் அபிவிருத்தியிலே கடைசி நிலையில் தொடர்ந்தும் தக்கவைக்கப்படும் மாவட்டமாகவும் உள்ள முல்லைத்தீவு மாவட்டத்தை சார்பாக்கும் ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் நான்.
சுற்றுலா நடைமுறை
படையினரில் அதிகம் கொண்ட இம்மாவட்டத்தில் தான் காடுகளுக்குள்ளும் ஆற்றங்கரைகளிலும் சட்டவிரோதமாக மணல் களவாடப்பட்டு எமது நிலம் சூறையாடப்படுகிறது. காடுகள் பாதுகாக்கப்பட்டு சூழலியல் சுற்றுலா நடைமுறைப்படுத்தப்படும் இதே தீவிலே தான் இன்றும் எம் காடுகள் அழிக்கப்பட்டு சட்டவிரோதமாக வேரறுக்கப்படுகின்றன.
சொந்த நிலத்தில் பயிரிடப் போகும் தமிழர்களை வழக்குகள் போட்டு சிறைப்படுத்தும் வனவளத்திணைக்களம் சட்டவிரோத காடழிப்பிலும் மணல் கொள்ளையிலும் வாய் மூடி மௌனம் காக்கிறது. காலாகாலமாக பௌத்தமயமாக்கலில் மட்டும் கரிசனை கொண்ட அரசுகளில் இருந்து இவ்வரசு சற்று அபிவிருத்தியிலும் முல்லைத்தீவைக் கருதுகிறது.
இவ்வாண்டுக்கான வெட்டுவாய்க்கால் பாலக்கட்டுமானம், சாலைகள் மேம்பாடு, அடுத்தாண்டில் தொடங்கவுள்ள கொக்கிளாய் - புல்மோட்டை பால கட்டுமானமென எங்களின் கோரல்களை நீங்கள் கருத்தில் கொள்வதை வரவேற்றுக் கொள்கிறோம். எனினும், இன்னமும் உங்களால் எங்கள் மாவட்டத்தில் கவனிப்படாத பக்கங்கள் எண்ணிறந்தவை! இறுதிப்போரில் பேரிழப்பை உயிரிலும் உடைமையிலும் அங்கங்களிலும் தாங்கி வாழும் முல்லைத்தீவு நெய்தல், மருதம், குறிஞ்சி, முல்லை என நாவகை நிலங்களையும் கொண்ட எழில் நிறைந்த மாவட்டம்.
முல்லைத்தீவின் இயற்கை வனப்பு
போருக்குப் பின்னரான அபிவிருத்தியில் மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ள இம்மாவட்டத்தில் பசுமை நிறைந்த இயற்கை, நீர்நிலைகள், வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்கள், பண்பாட்டு வளங்களென முல்லைத்தீவின் இயற்கை வனப்பு இம்மாவட்டத்தை ஒரு சிறந்த சுற்றுலாத் தளமாக மாற்றும் திறன் கொண்டன.
இருப்பினும் கவன ஈர்ப்புக்கு அடிப்படை வசதிகளின் பற்றாக்குறை, சந்தைப்படுத்தலில் உள்ள சவால், பாதுகாப்பு மற்றும் கண்ணிவெடி சார்ந்த பிரச்சினைகள், வடக்கும் தெற்கும் கொள்ளும் போர் சார்ந்த முரண் மனப்பாங்கு, உள்நாட்டு வெளிநாட்டு முதலீட்டாளர்களின் குன்றிய முதலீடுகள் உள்ளிட்டவை சவாலாகின்றன.
இயற்கை வனப்போடு இணைந்த சுற்றுலாத் தளங்களுக்கான வாய்ப்புகள் இங்கு நிறைவாக உள்ள நிலையிலும் அவற்றை அணுகுவதற்கு ஏற்ற போக்குவரத்து வசதிகள் மிகவும் குறைவாக உள்ளன. பல சுற்றுலாத் தளங்களுக்கு பொதுப் போக்குவரத்து இல்லை. உணவகங்கள், கழிவறைகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லை. முக்கிய சுற்றுலா இடங்கள் பற்றிய காட்சிப்படுத்தல்கள் சார்ந்த பன்னாட்டு ஊடகப்படுத்தல் இல்லை என குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





தமிழகத்தின் சட்ட ஒழுங்கும் கட்சி அரசியலும் 5 நாட்கள் முன்

எதர்சையாக சீதா-மீனாவிற்கு தெரியவந்த அருண் பற்றிய உண்மை, முத்து தான் செய்தாரா?... சிறகடிக்க ஆசை எபிசோட் Cineulagam
